Published : 12 Apr 2018 04:05 PM
Last Updated : 12 Apr 2018 04:05 PM

இரண்டு போராட்டங்களில் எது சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்: அரவிந்த் சாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் விளையாட்டு போட்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தையும், கருப்புக் கொடி போராட்டத்தையும் ஒப்பிட்டு நடிகர் அரவிந்த் சாமி ட்வீட் செய்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என, ஏப்ரல் 10-ம் தேதி நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போட்டியின்போது மைதானத்திற்குள் காலணியை வீசிய நாம் தமிழர் கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, சென்னையில் நடைபெறவிருக்கும் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் கருப்பு உடையணிந்தும், தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மோடியே திரும்பிப் போ’ என்பதைக் குறிக்கும் வகையிலான ‘Go Back Modi’ என்ற ஹேஷ் டேக் உலகளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்தது.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு நாட்களில்  2 விதமான போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு போராட்டம் எதிர்மறையான விளம்பரத்தைப் பெற்றது. நம் சொந்த மக்களையே காயப்பட வைத்தது. அதனால், சாதகமான சூழ்நிலை உருவாகவில்லை.

மற்றொரு போராட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது. கோரிக்கைகளும், போராட்டத்திற்கான காரணங்களும் கவனம் பெற்றன. இந்த இரண்டு போராட்டங்களில் எது அதிக திறன்வாய்ந்தது என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். அதை எதிர்காலத்திற்கான பாடமாகக் கொள்ளுங்கள்” என அரவிந்த் சாமி பதிவிட்டுள்ளார்.

— arvind swami (@thearvindswami) April 12, 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x