Last Updated : 25 Feb, 2018 08:44 AM

 

Published : 25 Feb 2018 08:44 AM
Last Updated : 25 Feb 2018 08:44 AM

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் மரணமடைந்தார். அவருக்கு வயது 55. உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி.

இந்நிலையில் இரவு அவருக்கு மாரடைப்பு நோய் ஏற்பட மரணமடைந்தார். திருமணம் முடிந்து மற்ற குடும்பத்தினர் இந்தியா திரும்ப ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் குஷி அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

1969-ல் துணைவன் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. பிறகு 1976-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களான கமல், ரஜினியுட்ன் கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு காயத்ரி, கவிக்குயில் ஆகியவற்றுடன் பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் புகழ்பெற்ற ‘மயில்’ பாத்திரத்துக்கு புகழ் சேர்த்தார். தமிழ் திரை ரசிகர்களின் நீங்காத இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி, மூன்றாம் பிறை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு விஷயமாகும்.

பாலிவுட்டில் 1978-ம் ஆண்டு சொல்வா சவன் அறிமுகப் படமாகும். ஆனால் இதற்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிதேந்திராவின் ஹிம்மத்வாலா மூலம் வணிக ரீதியான வெற்றி இவருக்குக் கிடைத்தது. இவர் தனது அபாரமான பன்முக நடிப்புத் திறனால் இந்தித் திரையுலகிலும் பெரிய அளவுக்கு வலம் வந்தார்.

கமல், ரஜினி, சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரீதேவி, எம்ஜிஆருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் கலக்கியவர் ஸ்ரீதேவி.

2012-ல் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்தவர், கடைசியாக மாம் என்ற திரைப்படத்திலும் கலக்கினார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் இவரது மறைவு திரையுலகை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x