Last Updated : 09 Feb, 2018 08:22 PM

 

Published : 09 Feb 2018 08:22 PM
Last Updated : 09 Feb 2018 08:22 PM

முதல் பார்வை: சவரக்கத்தி

 

கத்தியை வைத்தே தொழில் செய்யும் ரவுடியும், சலூன் கடைக்காரரும் மோதினால் அதுவே 'சவரக்கத்தி'.

வரலாற்று ரீதியிலான பொய்களை அளந்துவிட்டபடி வாழ்க்கையை நகர்த்துகிறார் சிகையலங்காரக் கலைஞர் ராம். பரோலில் வெளியே வந்த ரவுடி கும்பலின் தலைவன் மிஷ்கின், மாலையில் சிறைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் நடுரோட்டில் எதிர்பாரா விதத்தில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு கசப்பானதாக மாற, மிஷ்கினின் வாயில் இருந்து ரத்தம் தெறிக்கிறது, அதனால் அவமானப்படும் மிஷ்கின், ராமைப் பழிவாங்க துரத்துகிறார். மச்சானின் திருமணத்துக்காக மனைவி, குழந்தைகளுடன் வந்த ராம் இப்படிப்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கியதால் தன்னந்தனியே தலை தெறிக்க ஓடுகிறார். 'நீ ஓடிக்கிட்டே இரு நான் துரத்திப் பிடிக்கிறேன்' என்று மிஷ்கின் சவால் விடுக்கிறார். இந்த ஓட்டத்துக்கு இடையில் ராமின் மச்சான் என்ன ஆகிறார், அவருக்கு திருமணம் நடக்கிறதா, ரவுடிகள் கையில் சிக்கிய பூர்ணாவின் நிலை என்ன, ராம் சிக்கினாரா, மிஷ்கின் தன் பழியை எப்படி தீர்த்துக்கொள்கிறார் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'சவரக்கத்தி'.

வன்மம், ரத்தம், கத்தி, துப்பாக்கி என்றே புழங்கும் மனிதர்களிடையே முகிழ்க்கும் அன்பையும், மனிதநேயத்தையும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.

படத்தை மொத்தமாகத் தாங்கி நிற்கிறார் மிஷ்கின். அவமானத்தை எதிர்கொள்வது, சிறைவாசம் குறித்த வெறுப்பை உமிழ்வது, பழிதீர்க்க கோபாவேசத்துடன் புறப்படுவது, ஐடியா கொடுக்கும் சக கூட்டாளிக்கு மோதிரம், செயின் என வழங்குவது, ஆத்திரத்தை அடக்க முடியாமல் உடன் இருப்பவர்களை வெளுத்து வாங்குவது என ரவுடிக்கான குணாதியசங்களை, உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

சிகையலங்காரக் கலைஞர் கதாபாத்திரத்தில் வரும் ராம், சுவாரஸ்யம் அளிக்கும் அளவுக்கு பொய்யான வரலாறுகள் சொல்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டது போல பாவனை காட்டுவதும், சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது கொதித்தெழுவதும் கதாபாத்திரத்துக்கான முக்கிய இடங்கள். அதில் தன் மிகையான நடிப்பை வழங்கி இருக்கிறார் ராம்.

2 குழந்தைகளுக்குத் தாயாகவும், நிறை மாத கர்ப்பிணியாகவும் வெகுளியான கதாபாத்திரத்தில் பூர்ணா ஸ்கோர் செய்கிறார். பழமொழி சொல்லியே பஞ்சராக்கும் பூர்ணா, மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்குரிய நியாயம் செய்திருக்கிறார்.

பெத்தப்பாவாக வரும் மோகன், மனநலன் பாதிக்கப்பட்டவராக வரும் ஷாஜி, ராமின் சலூன் கடையில் வேலை செய்யும் நபர், மிஷ்கினிடம் மோதிரம், செயினைப் பரிசாகப் பெறும் நபர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு பளிச் அழகு. அரோல் கொரேலியின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. ஜூலியனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

நகைச்சுவை, உணர்வுபூர்வ காட்சிகள் ஆகியவற்றின் பயன்பாட்டை திரைமொழியில் மிகச் சரியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. சவரக்கத்தியை ஒட்டிய சில வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. பொய்யா மொழி தேநீர் கடை, பரிசுத்தம் மிதிவண்டி நிலையம் என்று பெயர்களிலும் தன் தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார். ஓடிப்போன தன் மகளை நினைத்து வருந்தும் தாய், அதற்குக் காரணமான இளைஞனின் கால் விளங்காமப் போக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார். அந்த இளைஞன் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்பதைக் கண்டு உறைந்து நிற்கும் இடமும், அப்படியே அந்தக் கால்களை தன் கைகளில் தாங்கும் இடமும் நேயத்தின் மாண்பை உணர்த்துகிறது.

படத்தில் குறிப்பிடும்படி அதிக கதாபாத்திரங்கள் இல்லை. அதற்காக அதே கதாபாத்திரங்கள் மீண்டும் மீண்டும் யதேச்சையாக ஒரே கும்பலிடம் சிக்குவது நம்பும்படியாக இல்லை. மிஷ்கினின் கோபம் பெரிது. அதற்கான தீர்வு அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றதாக இல்லை.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் கத்தி எதற்கு என்பதை உணர்த்தி, அன்பின் உன்னதத்தைச் சொன்ன விதத்தில் 'சவரக்கத்தி' கறைகளைக் கழுவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x