Published : 06 Feb 2018 08:25 AM
Last Updated : 06 Feb 2018 08:25 AM

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம் உறுதி

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறினார்.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட கியூப், யுஎஃப்ஓ ஆகிய நிறுவனங்கள் வழிசெய்துள்ளன. தயாரிப்பாளர்கள் இந்த நிறுவனங்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 முதல் அதிகபட்சம் ரூ.34,000 வரை பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், இதே துறையில் உள்ள வேறு சில நிறுவனங்கள் ரூ.4,000 முதல் ரூ.12,000 பெறத் தயாராக உள்ளன. இந்நிலையில், டிஜிட்டல் ஒளிபரப்புக் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு தீர்வு காணும் விதமாகவும் வேலைநிறுத்தம் தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியபோது, ‘‘திட்டமிட்டபடி மார்ச் 1-ம் தேதி முதல், புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதில் உறுதி யாக இருக்கிறோம். எங்களது இந்த முடிவுக்கு தெலுங்கு திரைத் துறையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மலையாளம், கன்னட மொழி புதிய படங்கள் வெளியீடு இருக்குமா, இல்லையா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினருடன் பேசி வருகிறோம். முழுமையான முடிவு நாளை தெரியவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x