Last Updated : 12 Jan, 2018 07:49 PM

 

Published : 12 Jan 2018 07:49 PM
Last Updated : 12 Jan 2018 07:49 PM

முதல் பார்வை: தானா சேர்ந்த கூட்டம்

 

ஊழலை ஊழலால்தான் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வேறு பாதையில் களமிறங்கும் இளைஞனின் கதையே 'தானா சேர்ந்த கூட்டம்'.

சிபிஐ அலுவலத்தில் கடைநிலை ஊழியராக வேலை பார்க்கும் தம்பி ராமையா தன் மகன் சூர்யாவை சிபிஐ அதிகாரியாகப் பார்க்க ஆசைப்படுகிறார். அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் சூர்யா நேர்முகத் தேர்வுக்கு செல்ல, அங்கே அதிகாரி சுரேஷ் மேனன் அவரை அவமானப்படுத்துகிறார். உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாகாது என்று பழமொழி சொல்லியே சூர்யாவின் கனவை நசுக்குகிறார் சுரேஷ் மேனன். இதனால் சூர்யாவுக்கு வேலை கிடைக்காமல் போகிறது. தன் நண்பன் போலீஸ் அதிகாரி ஆக முடியாமல் தற்கொலை செய்துகொள்ள சூர்யா மாற்றுப்பாதையைத் தேர்வு செய்கிறார். ஊழல் மிகுந்த அரசு அமைப்புகளை ஊழலால் திருத்தப் பார்க்கிறார். சூர்யாவின் அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு சிபிஐ அதிகாரிகள் ஆட்டம் கண்டு அதிர்ச்சி ஆகின்றனர். சூர்யா செய்யும் சித்து வேலைகள் என்ன, என்ன மாற்றம் நிகழ்ந்தது, போலீஸ் என்ன செய்தது என்பது மீதிக் கதை.

'ஸ்பெஷல் 26' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து தமிழுக்கு ஏற்றவாறு நல்ல என்டர்டெய்னர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

கவுதம் மேனன் வெர்ஷன், ஹரி வெர்ஷன் என்று ரெண்டு வெர்ஷனில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் 3.0 வெர்ஷனுக்கு மாறி இருக்கிறார். சூர்யாவின் புதுமையான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. சூர்யா வசன உச்சரிப்பும், தோற்றப் பொலிவும், நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அட போட வைக்கிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு சஸ்பென்ஸ் கலந்த கதாபாத்திரம். கடைசியிலும் அந்த சஸ்பென்ஸ் உடையாமல் தொங்கலில் நிற்கிறது. கீர்த்தி சுரேஷ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அதுவும் சூர்யாவுக்கு வசனங்கள் மூலம் பதிலடி கொடுப்பது செம்ம.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பு கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. சுரேஷ் மேனனின் மறுவருகை பாராட்டும்படியாக இருக்கிறது. சிபிஐ அதிகாரிக்குரிய கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் புத்திசாலி அதிகாரியாக நன்றாக ஸ்கோர் செய்கிறார். பெட்ரோமாஸ் லைட்டையும், செந்திலையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவை சிரிக்க வைக்கிறது. உனக்கு வேலை போனதுக்கு நான் ஏண்டா தற்கொலை பண்ணிக்கணும் என்று தம்பி ராமையா சொன்னதும் அழுத்த நிலையில் இருந்த தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது.

ஆனந்த்ராஜ், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், பிரம்மானந்தம், சிவசங்கர் மாஸ்டர், சத்யன், யோகிபாபு, நந்தா என்று எல்லோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளனர். மனதில் நிற்கும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள், வசனங்கள் மூலம் ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தினேஷ் கிருஷ்ணனின் கேமரா தானா சேர்ந்த கூட்டத்தை பளிச் என படம் பிடித்திருக்கிறது. இவ்வளவு ஃப்ரெஷ் லுக்கா என்று ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு ஒட்டுமொத்த அழகையும் கேமராவுக்குள் அள்ளி வந்திருக்கிறார். அனிருத் இசையில் சொடக்கு சொடக்கு பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் அனிருத் பின்னி எடுத்திருக்கிறார். பீலா பீலா பாடலுக்கு மட்டும் கத்தரி போட்டிருக்கலாம்.

''சார், என்ன சார் இந்தப் பக்கம்?'', ''சும்மா சாமி கும்பிட வந்தேன்,'' ''அப்படியா, அப்படியே போய் கும்பிடுங்கோ'', ''என்ன மூஞ்சிக்கு பின்னாடி கலாய்க்குறியா? மூஞ்சிக்கு முன்னாடிதான் கலாய்க்குறேன்'', ''தகுதியே இல்லாதவன்லாம் இங்கே, தகுதி இருக்கிறவன்லாம் எங்கே என்ன ஆனாங்கன்னு தெரியாம அப்படியே காணாம போயிடுறாங்க'', ''ஒருத்தன் பணக்காரனா இருக்க ஒரு கோடி பேரை பிச்சைக்காரனா ஆக்குறானுங்க'', ''நெஞ்சுல நேர்மையும் செய்யுற செயல்ல நியாயமும் இருந்ததுன்னா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை'' போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

சொடக்கு சொடக்கு பாடலுக்கு லீட் கொடுத்த விதத்திலேயே இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னை நிரூபித்து இருக்கிறார். சமூக அரசியலை நையாண்டி செய்யும் விதத்திலும் தன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். 80களின் இறுதியில் நடக்கும் கதை என்பதை உணர்த்த 'நாயகன்', 'ஒரு தாயின் சபதம்' பட போஸ்டர்கள், ரசிகர் மன்ற போஸ்டர்கள், தொலைபேசி என அந்தக் காலகட்டத்தை பின்னணியில் மட்டும் உணர்த்தி இருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தினர் எங்கு சென்றார்கள், சூர்யாவின் நண்பர்கள் என்ன ஆனார்கள், நந்தா எப்போது சூர்யாவுடன் இணைந்தார் என்று பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், பதில்தான் இல்லை.

லாஜிக் பார்க்காமல் மேஜிக் மட்டுமே தேவை, பண்டிகைக் கால கொண்டாட்டத்தில் ஒரு படம் என்பதே உங்கள் தேர்வு என்றால் இந்தக் கூட்டத்தில் நீங்கள் தாராளமாக இணையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x