Published : 25 Dec 2023 12:08 PM
Last Updated : 25 Dec 2023 12:08 PM

திரை விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள் 

தஞ்சாவூரின் கிராமம் ஒன்றில் வேலை வெட்டிக்குச் செல்லாமல் வாழ்ந்து வருகிறார் ஆனைமுத்து (சரவணன்). அவரும் அவர் சகோதரி மகன் தமிழும் (விதார்த்) ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் கழிவறை கட்டினால் பஞ்சாயத்து 12 ஆயிரம் ரூபாய் தரும் என்பதால், அதற்காக, குழி தோண்டுகிறார்கள். அதில் புதையல் கிடைக்கிறது. குழி தோண்டிய அரிச்சந்திரன் (ஜார்ஜ் மரியான்) அதைப் பார்ப்பதால், ஆனைமுத்து, தமிழ் ஆகியோருடன் அதை மூன்றாகப் பங்கு பிரித்துக் கொள்ள நினைக்கிறார்கள். பிறகு நடக்கும் குளறுபடிகளால் பங்கு ஐந்து, ஆறு என்று நீள, இறுதியில் புதையல் என்னவாகிறது என்பதை விழுந்து சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவையோடு சொல்வதுதான் படம்.

ஆயிரம் பொற்காசுகள் ஒருவருக்கு கிடைத்து, அது ஊர் முழுவதும் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை லாஜிக் மீறாத நகைச்சுவையால் கலகலப்பாகத் தந்திருக்கிறார், இயக்குநர் ரவி முருகையா. கதையே காமெடிக்கான அனைத்தையும் கொண்டிருப்பதால், எளிதாகப் படத்தோடு ஒன்றிக்கொள்ள முடிகிறது.

வேலை வெட்டி இல்லாத ஆனைமுத்து, தமிழ், எதிர்வீட்டு மீன் வியாபாரி கோவிந்தன் (ஹலோ கந்தசாமி), போலீஸ் அதிகாரி முத்துப்பாண்டி (பாரதி கண்ணன்), நகை செய்பவர் (வெற்றிவேல் ராஜா), நாயகி பூங்கோதை (அருந்ததி நாயர்), அவரின் தோழி (செம்மலர் அன்னம்), வட இந்திய மனநோயாளி என அவர் தேர்வு செய்த கேரக்டர்களும் அவர்களுக்கான எழுத்தும் படத்துக்குக் கச்சிதமாகக் கைகொடுத்திருக்கின்றன. பெரிய வாய்ப்பு கிடைக்காத சின்ன நடிகர்களும் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள் என்பதற்கு இந்தப் படம் சாட்சி.

சமீப காலமாகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் விதார்த், இதிலும் தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். வேலை வெட்டி இல்லாத சரவணன், டிவியை சத்தமாக வைத்துவிட்டு பண்ணும் ரகளைகள் சிரிப்பை வரவழைக்கின்றன. விதார்த்தைக் கண்டதுமே காதலிக்கத் தொடங்கும் அருந்ததி நாயர் கேரக்டர் கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அம்மாவுக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர், ஊரை விட்டு ஓட கிளம்புவதும் பிறகு காலையில் வந்து கடிதத்தை எடுத்துவைத்துவிட்டு அம்மாவுடன் படுத்துக்கொள்வதும் குபீர் ரகம். கிளைமாக்ஸில் புதையலைக் கைப்பற்ற ஊரே நடத்தும் துரத்தல், நகைச்சுவை நான்ஸ்டாப்.

பானுமுருகனின் ஒளிப்பதிவும் ஜோஹன் சிவனேஷின் இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. தொடக்கத்தில் புதையல் கிடைக்கும் வரை படம் மெதுவாக நகர்ந்தாலும் அதற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் ரசிக்க வைக்கின்றன. பெண்ணின் நிறத்தை வைத்து கேலி செய்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். சிறு பட்ஜெட் படங்களுக்கு என இருக்கும் குறைகள் இதிலும் இருந்தாலும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ சிரிப்புக்குத் தருகிறது, சிறப்பான கியாரண்டி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x