

அம்மு பிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஸோயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம், ‘கண்ணகி’. இதை அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார். ஸ்கைமூன் என்டர்டெய்ன்மென்ட், இஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது.
படம் பற்றி இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் கூறும்போது “நான் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். இது நான்கு பெண்களின் வெவ்வேறு பிரச்சினைகளைப் பேசும் ஹைபர்லிங் படம். இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்னும் பின்னும் நடக்கும் உளவியல் மற்றும் உறவுச் சிக்கல்களை இந்தப் படம் பேசும். கண்ணகி என்ற தலைப்பு ஏன் என்று கேட்கிறார்கள்.
நம் இலக்கியத்தில் கண்ணகிக்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு பெண் நேருக்கு நேர் நின்று நியாயம் கேட்பது வேறு மொழி இலக்கியத்தில் இருக்கிறதா என்றுதெரியவில்லை. அதனால் எனக்கு கண்ணகியைப் பிடிக்கும். நியாயம் கேட்கும் பெண்கள் தொடர்பான படம் என்பதால் இந்தத் தலைப்பை வைத்தேன். இந்தப் படம் கண்டிப்பாக வேறொரு அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்” என்றார்.