

சென்னை: ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ரஜினி170’ படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகை ரித்திகா சிங் காயமடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், “இது பார்க்க ஓநாயுடன் சண்டைபோட்டது போல இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோவில் பேசும் அவர், “நான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறேன். கண்ணாடியிருக்கிறது கவனமாக இருக்கும்படி அவர்கள் என்னை எச்சரித்துகொண்டே இருந்தார்கள். பரவாயில்லை. இது நடக்கூடியது தான்.
சில நேரங்களில் உங்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்து. இப்போது எனக்கு எந்த வலியும் இல்லை. ஆனால் காயம் மிகவும் ஆழமாக இருப்பதால் வலிக்கும் என நினைக்கிறேன். சிகிச்சைக்காக செட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்கிறேன். இது விரைவில் சரியாகவிடும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினி170: நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.