Published : 19 Jan 2018 01:59 PM
Last Updated : 19 Jan 2018 01:59 PM

சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - கீ விழாவில் சலசலப்பு: விஷால் பதில்

'கீ' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கீ'. மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும் போது, " 'வல்லவன்' படத்தை சிம்புவை இயக்குநராக வைத்து எடுத்தேன். அதனால் ஏற்பட்ட பிரச்சினை எவ்வளவு என்பது எனக்குதான் தெரியும். ஆனால், நான் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பிறகு எனக்கிருக்கும் பழக்கவழக்கங்களை வைத்து எழுந்து, தற்போது மம்மூட்டியை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராய்ப்பனை பற்றி பலரும் புகழ்ந்து பேசினார். இதன் மூலம் அவருடைய நேர்மை தெரிகிறது. அவர் சிம்பு மீது புகார் அளித்திருக்கும் நிலையில், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. இதை தலைவர் விஷாலிடமே கேட்கிறேன்" என்று பேசினார்.

அப்போது 'வின்னர்' படத்தின் ராமச்சந்திரன் எழுந்து "இதை பொதுவெளியில் கேட்கக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்க வேண்டும்" என்று கோபமாக பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து மைக்கேல் ராயப்பன், "எனது கடமை, நான் பேசினேன். புகாருக்குப் பிறகும் கூட சிம்பு செல்ஃபி எடுத்து வெளியிடுகிறார். அப்படியென்றால் தயாரிப்பாளர்களுக்கு ஒற்றுமையில்லை என்று தானே அர்த்தம்" என்று பேசினார். அப்போது ராமச்சந்திரன் - தேனப்பன் இருவருக்குமே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இசை வெளியீட்டு விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பேசிய விஷால் "அனைவருமே நடிகர் விஷால் என்று அழைத்தால் சரியாக இருக்கும். நடிகராக வந்ததைத் தொடர்ந்தே பதவிகள் வந்தன. இங்கு நடந்த விஷயத்திற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கோபத்தால் எதையுமே சாதிக்க முடியாது, பொறுமையாக இருக்க வேண்டும். 'கீ' இயக்குநர் காலீஸ் ட்ரெய்லரை படப்பிடிப்புக்கு இடையே காட்டினார். அருமையாக இருந்தது. வருங்காலத்தில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக வருவார். ஜீவாவின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்.இப்படம் சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நிறைய பேர் விஷால் இந்த தயாரிப்பாளருக்கு நல்லது செய்ய வேன்டும் என பேசினார்கள். எனது 'இரும்புத்திரை' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளிவராது. ஏனென்றால் அதே தேதியில் இப்படம் வெளியாகவுள்ளது. மற்றொரு நல்ல தேதியில் எனது படத்தை வெளியிட்டுக் கொள்கிறேன்.

நல்ல விஷயங்கள் செய்யும் போது ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கும். மைக்கேல் ராயப்பன் சாருடைய முந்தைய படத்தால் நஷ்டமடைந்தார். இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சந்தித்தார். இங்கு தேனப்பன் சார் பேசியது உண்மைதான். அவர் புகார் அளித்தது உண்மைதான். ஆனால் சிம்பு தரப்பிலிருந்து எந்தவொரு ரியாக்‌ஷனுமே வரவில்லை. கேள்வி கேட்டு பதில் வரவில்லை என்றால், நான் போய் என்ன சுவற்றிலா முட்ட முடியும். தற்போது மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறோம்.

மைக்கேல் ராயப்பன் சாருடைய நிறுவனத்தில் ஏற்கெனவே ஒரு படம் நடித்திருக்கிறேன். தற்போது மீண்டும் ஒரு படம் செய்யலாம். நீங்களே படக்குழுவினரை ஒருங்கிணையுங்கள். எனக்கு எந்தவொரு பணமும் தர வேண்டாம். படம் நல்லபடியாக முடித்து, வியாபாரம் செய்து முடித்து, அனைத்து நல்லபடியாக முடிந்ததவுடன் எனக்கு ஏதாவது கொடுங்கள் வாங்கிக் கொள்கிறேன்.

பார்க்கிங் கட்டணத்தை வரைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதை பல திரையரங்குகள் பின்பற்றுவதில்லை. ஏன் கமலா சினிமாவே பின்பற்றுவதில்லை. அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குத் தேவையில்லை. க்யூப் பிரச்சினை தொடர்பாக விரைவில் 4 தென்னிந்திய திரையுலகினரும் சேர்ந்து ஒரு முக்கிய முடிவு எடுக்கப் போகிறோம். அந்த முடிவு தொடர்பாக நீங்கள் முதுகில் குத்தினாலும், எங்கு குத்தினாலும் பின்வாங்கப் போவதில்லை. கேபிள் தொலைக்காட்சி மற்றும் க்யூப் கட்டணம் இரண்டு முக்கியமான பிரச்சினையுமே மே மாதத்திற்குள் முடிவுக்கு வரும்" என்று பேசினார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x