Last Updated : 13 Dec, 2017 07:12 PM

 

Published : 13 Dec 2017 07:12 PM
Last Updated : 13 Dec 2017 07:12 PM

விஷாலின் பணி இனி எளிதாக இருக்காது!

சில வாரங்களுக்கு முன்பு வரை, கோலிவுட்டின் முக்கிய நபர் விஷால். துறையில் சக்திவாய்ந்த மனிதர், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கியப் பொறுப்பிலிருப்பவர். அவருக்கான எதிர்ப்புகள் இரண்டு சங்கங்களிலும் இருந்தாலும், இரண்டு சங்கங்களிலும் அவருக்கிருந்த அதிகாரம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்று அறிவித்த நாளிலிருந்து அனைத்தும் மாறியது.

விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டாலும், இரண்டு சங்கங்களை சேர்ந்தவர்களும் சற்றே எரிச்சலடைந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு விஷாலின் அரசியல் கனவு பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை. ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பதால் அது துறையை பாதிக்கும் என அவர்கள் நினைத்தனர்.

ஒரு மூத்த தயாரிப்பாளர் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ ஒரு அரசியல் கட்சி அல்ல. நாங்கள் அரசாங்கத்தின் தயவில்தான் எப்போதும் இருக்கிறோம். அரசாங்க மானியத்தை எதிர்நோக்கிதான் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் உள்ளனர். டிக்கெட் விலையோ, வரியோ, சினிமா சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்குமான ஒழுங்குமுறையும் மாநில அரசின் கட்டுப்பாடில்தான் இருக்கின்றன.

இவ்வளவு ஆண்டுகளாக துறைக்கும் ஆளும் அரசாங்கத்துக்கும் ஆரோக்கியமான உறவு இருந்து வருகிறது. இதற்கு முன் திரைத்துறையில் இயங்கி, பின் சங்கங்களில் பொறுப்பேற்றவர்கள் கூட, தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டே அரசியல் தேர்தலில் போட்டியிட்டனர். விஷால் அதைச்ச் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் தனிப்பட்ட முறையில் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை" என்றார்.

ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சேரன் விஷாலுக்கு எதிராக முன் நின்று போராடி வருகிறார். விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என சேரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிறு அன்று நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டமும் குழப்பமாகத்தான் இருந்திருக்கிறது.

"தயாரிப்பாளர் சங்கத்தை நடத்துவது மற்றும் சில நிதி முறைகேடுகள் குறித்து நாங்க கேட்ட கேள்விகளுக்கு விஷால் பதில் கூற மறுத்துவிட்டார். எங்களிடம் கணக்கு காட்டவும் மறுத்துவிட்டார். தனிப்பட்ட நிதியாளர்களின் அழுத்ததால் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தும் பேசவில்லை. தயாரிப்பாளர்கள் சார்பாக பேசும் அனைத்து தகுதியையும் விஷால் இழந்து விட்டார்" என சேரன் பேசியுள்ளார்.

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் டி ராஜேந்தர் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்க விதிகளின் படி, அரசாங்கத்துக்கு எதிராக உறுப்பினர்கள் செயல்பட முடியாது. விஷால் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அவர் சங்கப் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்த பிறகே முடியும்" என்றார்.

விஷாலுக்கு பெரிய அடி, அவரது நெருங்கிய நண்பரும், நடிகருமான பொன்வண்னனின் ராஜினாமாவினால் கிடைத்தது. விஷாலின் முடிவை எதிர்க்கும் விதமாக தனது நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்தார். அவரது கடிதத்தில், "ஒரு அணியாக நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டோம். அரசியல் தொடர்பு இல்லாமல் இருப்போம் என அப்போதே தெளிவாக பேசியிருந்தோம். இத்தனைக்கும், தேர்தல் முடிந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போகும் போது, அவரே கூட, அரசியல் கலப்பில்லாமல் ஜெயித்ததற்காக எங்களை வாழ்த்தினார். எங்கள் வலிமையே, அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதும், உறுப்பினர்களின் நலனுக்காக உழைப்பதும்தான். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் எடுத்திருக்கும் திடீர் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இவர்தான் அரசியலிலிருந்து விலகி இருப்பதாக உறுதியளித்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றாலும் கூட, என் தனிப்பட்ட கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று உறுதியாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

அழுத்தத்தை உணரும் விஷால்

விஷால் தற்போது அபரிமிதமான அழுத்தத்தில் இருக்கிறார். 6 மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருட்டு விசிடிக்கு எதிரான போராட்டத்தில் நன்றாக செயல்பட்டுள்ளார். விஷயங்களை தைரியமாக எதிர்கொள்கிறார். தனது பொங்கல் வெளியீடான 'இரும்புத்திரை'யில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையிலும், "வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக என் மீது அழுத்தம் தரும் சுயநலவாதிகளை பார்த்து நான் அஞ்ச மாட்டேன். நிதி மோசடி என்று என் பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைப்பவர்கள் ஆதாரத்தோடு வரட்டும்" என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், விஷாலுக்கு இருக்கு மிகப்பெரிய சவால், மலேசியாவில், ஜனவரி 6, 2018 அன்று நட்சத்திர விழா நடத்துவதுதான். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட 100 நடிகர்கள் பங்குபெறும் மாபெரும் பிரமாண்ட நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டிடத்துக்காக நிதி சேர்க்க, மலேசிய அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என கோலிவுட்டின் இரண்டு வலிமையான சங்கங்களை வழிநடத்தும் விஷாலுக்கு இனி இது எளிதான பணியாக இருக்காது.

தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x