ரவிதேஜாவுடன் நடித்தது அதிர்ஷ்டம்: சொல்கிறார் நுபுர் சனோன்

ரவிதேஜாவுடன் நடித்தது அதிர்ஷ்டம்: சொல்கிறார் நுபுர் சனோன்

Published on

ஹைதராபாத்: பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனோனின் சகோதரி நுபுர் சனோன். பாடகியான இவர், ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர், ரேணு தேசாய், முரளி சர்மா, ஹரீஷ் பெரேடி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் நடித்தது பற்றி நுபுர் சனோன் கூறியதாவது:

ரவிதேஜாவுடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர் தனித்துவமான நடிகர் என்பதை அறிவேன். மிகவும் தன்மையானவர். நடிப்பு என்று வந்துவிட்டால் பரபரப்பாகி விடுவார். அக்‌ஷய்குமாருடன் ‘பில்ஹால் 2’ என்ற ஆல்பத்தில் நடித்தபோது, அடுத்து என்ன படம் பண்ணுகிறீர்கள்? என்று கேட்டார். நான் சொன்னேன். யார் நடிக்கிறார் என்றார். முழு பெயரையும் சொல்லாமல், ‘ரவி’ என்று மட்டும் சொன்னேன். அவர் சொன்னார், ‘கண்ணை மூடிகொண்டு ஒப்புக் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உங்களுக்குத் தெரியாது’ என்றார். அவர் சொன்னதைப் படப்பிடிப்பில் உணர்ந்தேன். முதல் பட நடிகை என்று பார்க்காமல் என்னை கவனித்துக் கொண்டார். இந்தப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது. என் சகோதரி கீர்த்தி சனோன் நடித்துள்ள ‘கணபத்’ படமும் அதே நாளில் வெளியாகிறது. இரண்டு படமும் வெற்றிபெற வேண்டும்” என்றார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in