பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு

Published on

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார்.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in