லவ்லெஸ்: அன்பற்ற வாழ்வின் விளைவுகள்

லவ்லெஸ்: அன்பற்ற வாழ்வின் விளைவுகள்
Updated on
2 min read

கணவன் மனைவி இருவரிடையே அன்பில்லாமல் போகும்பொழுது அவர்களுடைய பிள்ளைகள் என்னவாகிறார்கள்? அந்த பிள்ளைகளை கணவன் மனைவியின் முடிவுகள் எப்படியெல்லாம் பாதிக்கும் என தனது 'லவ்லெஸ்' திரைப்படத்தின் மூலம் நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆந்த்ரே ஸ்வ்யகின்செவ். கூடவே தற்போதைய ரஷ்யாவின் நிலையையும் அப்படியே படம் பிடித்துக்காட்டியுள்ளார். பொதுவுடைமை நாடாக அறியப்படும் ரஷ்யாவில் அதன் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

சென்யா, போரிஸ் இருவரும் விவாகரத்து பெற இருக்கும் நிலையில் அவர்களுடைய மகன் அலெக்ஸி காணாமல் போகிறான். விவாகரத்திற்கு முன்பே தனித்தனியே வாழ ஆரம்பித்துவிட்ட போரிஸும் சென்யாவும் ஒன்றாக மகன் அலெக்ஸியைத் தேடுகிறார்கள். அந்த தேடல் அவர்களது வாழ்க்கையை புரிந்துகொண்டார்களா? என்பதே 'லவ்லெஸ்'. தலைப்பிலேயே கதையை சொல்லிவிட்டார் இயக்குநர். அன்பில்லாமல் வாழ்வது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை 'லவ்லெஸ்' நமக்கு உணர்த்துகிறது.

அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதைப் பார்க்கும் அலெக்ஸி அதன்பின்னே வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கிறான். அதன்பின் அவன் என்னவாகிறான் என்ற பதைபதைப்பு படம் முடியும்வரை இருகிறது. மகனைத் தேடுவதற்காக கணவனும் மனைவியும் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வதும் அதனூடே தங்கள் வாழ்க்கையைப் பற்றிய புரிதல்களைப் பெற்றாலும் அதன்பின் எழும் விவாதங்களும் திருமண வாழ்க்கை குறித்த கேள்வியை எழுப்புகிறது. காதலே இல்லாமல் இருவரும் இணைந்து வாழ்ந்ததினால் பிரிய முற்பட்டாலும் மகனுக்காக அவர்கள் முடிவில் மாற்றம் ஏற்படுமா? என்பதை 'லவ்லெஸ்' நிறைய உணர்ச்சிமயமாக சொல்லியிருக்கிறது. பதின்பருவத்தில் திருமணம் செய்துகொள்வதும் அதன்பின் அந்த வாழ்க்கையில் காதல் இல்லை என உதறுவதுமாக சென்யா கதாபாத்திரம் தனக்கான அன்பையும் சுதந்திரத்தையும் தேடுவதாக இருக்கிறது. தனது தப்பு உணர்ந்தும் அதனை ஒத்துக்கொள்ளாமல் இருப்பதும் பின் குமுறி அழுவதுமாக போரிஸ் வழக்கம்போல பொதுவான ஆண்களையே பிரதிபலிக்கிறான்.

தாங்கள் இணைந்து இருந்த வீட்டை விற்க சென்யா சொல்லும் அனைத்தும் உண்மையா பொய்யா என்பதை அவை நம்மூரின் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை நினைவுபடுத்துகிறது. சந்தைபொருளாகிவிட்ட ஒன்றை விற்க அதற்கு செய்யப்படும் விளம்பரங்கள் எவ்வளவு முட்டாள்தனமானவை என்பதை அந்தக் காட்சிகளின் வழியே சொல்லாமல் சொல்கிறார். சென்யா போரிஸ் இருவருமே அலெக்ஸி குறித்தான எவ்வித அக்கறையுமில்லாமலே இருக்கின்றனர். காணமல் போன பின்புதான் அது அவர்களுக்கு புரிகிறது. விவாகரத்து வாங்குவதில் அவர்களது தனிப்பட்ட சுதந்திரம் இருந்தாலும் அவர்களைச் சார்ந்து இருக்கும் மகனையோ மகளையோ கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அந்த இறுதிக்காட்சி நமக்கு சொல்கிறது.

சோவியத் யூனியன் சிதைந்த பிறகு ரஷ்யாவிற்குள் நுழைந்த முதலாளித்துவக் கூறுகளை நுட்பமான காட்சிகளின் மூலம் விமர்சிக்கிறார் ஆந்த்ரே ஸ்வ்யகின்செவ். தனித்தனி மனிதர்களாக தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் மாந்தர்கள், வேலைக்காக வெளிநாட்டிலேயே இருக்கும் பெண், தனது உயரதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கும் போரிஸ், எப்போதும் சோசியல் மீடியாவிலேயே மூழ்கி கிடக்கும் சென்யா, அரசு அமைப்பு செய்யவேண்டியதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்வது என பல இடங்களில் ரஷ்யாவின் முதலாளித்துவ முகத்தை அப்படியே காட்டுகிறார் இயக்குநர். இந்த உணர்ச்சிகரமான கதையுனூடே இத்தகைய விசயத்தை நுட்பமாக கையாண்டிருக்கிறார்.

ஆரம்பக்காட்சியில் வரும் பனிபடர்ந்த காடு இறுதிக்காட்சியில் வரும்பொழுது அது கடத்தும் உணர்வுகள் ஏரளாம். இல்லறத்தில் அன்பில்லாமல் போகும்பொழுது அதன் விளைவுகள் விஸ்வரூபமாக இருக்கும். அமைதியை முற்றிலுமாக குலைத்துவிடும். விவாகரத்து பெறுவது சரியா? திருமண அமைப்பு சரியா? அல்லது தனிமனித சுதந்திரமும் மரியாதையும் முக்கியமா? என பல விவாதங்களை நமக்கும் ஏற்படுத்தும் இந்த 'லவ்லெஸ்'.

2017 கான்ஸ் திரைப்பட விழாவில் நடுவர்களின் சிறப்பு பரிசினை இப்படம் வென்றுள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து 90வது ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்பட பிரிவிற்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது 'லவ்லெஸ்'.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in