Published : 07 Dec 2017 12:46 pm

Updated : 07 Dec 2017 12:46 pm

 

Published : 07 Dec 2017 12:46 PM
Last Updated : 07 Dec 2017 12:46 PM

தன்னடக்கமானவர் என்றால் அது தனுஷ் தான்: சிம்பு

உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள் என்று 'சக்கப் போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு தெரிவித்தார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டியல்யா, விவேக், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சக்கப் போடு போடு ராஜா'. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் சிம்பு. விடிவி கணேஷ் தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இவ்விழாவில் சிம்பு பேசியதாவது:

இசையமைப்பாளராக இந்த மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தை நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம் சந்தானம். நல்ல திறமைசாலி ஆகையால் இவர் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் என நினைத்தேன். இன்றைக்கு அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இசை என்பது ரொம்பப் பிடித்த விஷயம். இளையராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்தவன் நான். அதே போன்று மைக்கேல் ஜாக்சனும் பிடிக்கும். இவர்கள் இருவரும் எனக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். அப்பாவும் சிறுவயதிலிருந்து குருமாதிரி கூடவே இருந்து இசையை சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனது மானசீக குருவாக ரஹ்மான் சாரைப் பார்க்கிறேன். பிறகு நண்பராக, குருவாக இருந்தவர் யுவன் சங்கர் ராஜா. நல்ல உள்ளம் கொண்ட மனிதர். என்னை புரிந்து கொள்வது மிகவும் கடினம். என்னை புரிந்துக் கொண்டு எனது டார்ச்சரை எல்லாம் தாங்கிக் கொண்டு, ஒரு நாள் கூட இப்படி பண்ணலாமே என்று சொன்னதே கிடையாது. மிக்க நன்றி யுவன் சார். நான் இன்றைக்கு இசையமைப்பாளராக உருவாகியிருப்பதற்கு அவர் ஒரு மிகப்பெரிய காரணம். தேவா சார், வித்யாசாகர் சார், ஹாரிஸ் ஜெயராஜ் சார், ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ், தரண், தமன், குறள் மற்றும் ப்ரேம்ஜி என நான் பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த மேடையில் வாலி சார் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. என் முதல் படத்திலிருந்து பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு பாடல்கள் எழுதிய அனைவருக்கும் நன்றி. படமும் அற்புதமாக வந்திருக்கிறது.

சிம்புவுக்கு பிரச்சினை என்றால் தனுஷ், தனுஷுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சிம்பு. 'காதல் கொண்டேன்' படம் நானும் தனுஷ் சாரும் இணைந்து ஆல்பட் திரையரங்கில் இணைந்து பார்த்திருக்கிறோம். தன்னம்பிக்கை இல்லையென்றால் எப்படி வாழ்வது?. அன்றைய தினத்தில் நாம் இருவரும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வருவோம் சார் என்று தனுஷிடம் சொன்னேன். எங்கள் இருவருக்குள்ளும் போட்டி, பொறாமை இருக்கிறது என்று வெளியே சொல்கிறார்கள். ஆனால், எங்கள் இருவருக்குள்ளும் உண்மையான அன்பு இருக்கிறது. அந்த அன்பு என்றைக்குமே இருக்கும். அதற்காக இங்கு வந்திருக்கிறார். தன்னடக்கமானவர் என்றால் அது தனுஷ்தான்.அவருடைய உயரத்திற்கு தலைக்கனம் இருந்திருந்தால் காணாமல் போயிருப்பார். அவர் போயிருந்தால் நானும் போயிருப்பேன். பலரும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என கேட்கிறார்கள். அதற்கு காரணம் தனுஷ் தான். அவர் சரியான படங்களைத் தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் எனக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை என நினைக்கிறேன்.

என்ன செய்தாலும், "ஆமாம்டா என்ன இப்போ" என்று பேசிய பழகிவிட்டேன். பலரும் குறை சொல்லும் போது, நம் மீதும் ஏதோ தப்பு இருக்க வேண்டும் அல்லவா. தப்பு இல்லாமாலா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என் மீதும் தப்பு இருக்கிறது. அதையும் ஒப்புக் கொள்கிறேன். 'AAA' படம் சரியாக போகவில்லைதான். ரசிகர்களுக்காக ஜாலியாக செய்த படம் அது. கொஞ்சம் அதிக செலவானதால், 2- பாகங்களாக போக வேண்டியதாகிவிட்டது. அதனால் தயாரிப்பாளருக்கு மனக்கஷ்டம் இருந்தது. என்னவென்றால் படம் நடக்கும் போதோ, முடிந்த உடனேவோ அல்லது 1 மாதம் கழித்தோ சொல்லியிருக்கலாம். 6 மாதம் கழித்து வேறு யாரோ சொல்கிறார்கள் என்னும் போதுதான் வருத்தமாக இருக்கிறது. நான் ஏதாவது தவறு செய்திருந்தால், இச்சமயத்தில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் நல்லவன் என்று சொல்லவில்லை, என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியும்.

இப்பிரச்சினையால் நடிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால், மணிரத்னம் சார் 'நீ தான் நடிக்கிற' என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு என் மீது எப்படி இவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அதிகபட்சமாக போனால் தமிழ் சினிமாவில் நடிக்கக் கூடாது என 'ரெட்' போடுவார்கள். நடிக்கவில்லை என்றால் என்ன, எங்கப்பா - அம்மா திறமைசாலியாகதான் வளர்த்திருக்கிறார்கள். படத்தில் நடித்துதான் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு ரசிகர்கள் மட்டுமே காரணம். என்ன செய்தாலும், ரசிகர்களை விட்டு போய்விட மாட்டேன்.

எனக்கு இந்த உலகத்திற்கு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்று தற்போதுதான் கண்டுபிடித்தேன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். ஆனால், நான் இந்த வரிசையில் பாலோ செய்யவில்லை. எனது வரிசையில் முதலில் தெய்வம்தான். தெய்வம் கொடுத்தது தான் வாழ்க்கை, ஆகையால் அவரை பின்னால் போடுவதற்கு மனதில்லை. உலகம் ஒரு வரிசையில் பார்த்தால், நான் வேறு மாதிரி பார்க்கிறேன். இது தான் எனக்குள் இருக்கும் பிரச்சினையே.

திடீரென்று தனுஷ் மீது நடிப்பு என்றதொரு பாரத்தைப் போட்டார்கள். அதை இறக்கி வைக்காமல், தொடர்ச்சியாக போராடி வருகிறார். அவருக்கு பக்கத்தில் கடவுள் எனக்கொரு இடம் கொடுத்திருக்கிறார் என்றால், அதையே மிகப் பெரிய இடமாக தான் நினைக்கிறேன். அவரைப் போன்று திடீரென்று வராமல், பிடித்து ரசித்து இந்த துறைக்குள் வந்தேன். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை வேறு எதைப் பற்றியும் கவலையில்லை.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.

இவ்வாறு சிம்பு பேசினார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author