

சிரியாவில் தொடர்ந்து உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்து வருவது பலருக்கும் தெரிந்த ஒன்று. அத்தகைய பதற்றமான சூழ்நிலையில் அங்கே இருக்கும் குடும்பங்களின் நிலை என்னவாக இருக்கும்? அங்கே வசிக்கும் சாதரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என நாம் அறிந்துகொண்டதே இல்லை என்பதை இன்சிரியா எனும் படத்தின் மூலம் நமக்கு கடத்துகிறார் இயக்குநர் பிலிப் வன் லீயூ.
சிரியாவின் உள்நாட்டு போர் தொடர்பான செய்திகளை அன்றாட செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து கடந்து போயிருப்போம். ஆனால் அதன் தீவிரத்தை அங்கே வாழும் மக்களின் பதற்றமான வாழ்க்கையை 'இன்சிரியா' நமக்கு பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது. போர் நடக்கும் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டின் பிளாட்டில் சிக்கிக்கொண்ட இருவேறு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கைதான் 'இன்சிரியா'. அசாதாரணமான காலைப்பொழுதில் பிளாட்டில் இருந்து வெளியே செல்லும் சமீருக்கு நிகழும் அசாம்பவிதமும் அதன்பின் அன்றைய தினத்தில் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன.
அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டில்தான் மொத்த கதையும் நிகழ்கிறது. படத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பதற்றம் கடைசி வரை குறையவே இல்லை. அந்த பெரிய பிளாட்டில் சிக்கிக்கொண்ட அனைவரும் பல நாட்களாகவோ அல்லது பல மாதங்களாகவோ அங்கேயே இருக்கிறார்கள் என்பதை முதல் காட்சியிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குநர். எவ்வளவு சொன்னாலும் அம்மாவின் பேச்சை கேட்காத குறும்பான மகள்கள், வெளியே போர் நிகழ்கிறது என்ற எவ்வித பயமும் இல்லாமல் தன்னுடைய பாடங்களைப் படிக்கும் அந்த சிறுவன், எல்லா வீட்டிலும் இருக்கும் தாத்தாவை போலவே இங்கேயும் ஒரு தாத்தா என அவர்களது இயல்பான வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விசயங்களும் அந்த பிளாட்டிற்குள்ளேயும் இருக்கின்றன.
குண்டுமழையில்தான் காலைப்பொழுதே விடிகிறது. தங்களுக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைத்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துகின்றனர். காலையில் இருந்து இரவு வரை பலமுறை குண்டுமழைகளுக்கு பயந்து சமையலறைக்குள்ளேயே பதுங்கியிருக்கிறது மொத்த குடும்பமும். ஒவ்வொருமுறை சமையலறைக்குள்ளே செல்லும்போதும் அவர்களையெல்லாம் அந்த வயதான அம்மாவே வழிநடத்துகிறார். அவரே எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்கிறார்.
அந்த வயதான அம்மா, இரு மகள்கள், சிறுவன், தாத்தா, இளவயது அம்மா, அவருடைய கணவன், என மிகக் குறைந்த கதாபாத்திரங்களே திரையை ஆக்கிரமித்திருக்கின்றன. சிரியாவின் உள்நாட்டு போரில் யாருக்கு ஆதரவாகவும் படம் பேசவில்லை. சொல்லப்போனால் எந்த ராணுவம் குண்டு மழை பொழிகிறது என்பது கூட சொல்லப்படவில்லை. ஆனால் போரினால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை மட்டும் கண் முன்னே நிறுத்துகிறார். அந்த பிளாட்டின் கதவு காட்டப்படும் பிரேம்கள் அனைத்தும் செம்ம. ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னும் காட்டப்படும் கதவு பல்வேறு உணர்வுகளை கடத்துகிறது. அதே போன்று படத்தின் ஆரம்ப காட்சியும் படத்தின் இறுதியும் தொலைதூர நல்வாழ்வை விட தங்களது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன. காட்சிகள் மூலமும் நிறைய விசயங்களை சொல்கிறார் இயக்குநர்.
திரைப்படம் முழுக்க ஒரு பிளாட்டிற்குள்ளேயே நிகழ்ந்த போதிலும் படத்தின் ஒளிப்பதிவு அருமை. ஒவ்வொரு கதாபாத்திரம் கூடவே கேமரா பயணிக்கிறது. அம்மக்களின் வாழ்க்கையை அப்படியே நிகழ்த்திக்காட்டியது போன்று இருந்தது நடித்த அனைவரின் நடிப்பு.
திரைப்படத்தின் ஒரு காட்சியில் கூட போர் விமானங்களையோ போர்க்கள நிகழ்வுகளையோ காட்சிப்படுத்தவில்லை. ஆனால் அவற்றிற்கு சாட்சியாக பிளாட்டினுள் நடக்கும் விசயங்கள் இருக்கின்றன. படத்தில் உரையாடல்களைத் தாண்டி ஒளியமைப்பும் ஒலியமைப்புமே பல்வேறு உணர்வுகளை நமக்கு கடத்துகின்றன. ஜன்னல்களின் பின்னால் இருக்கும் திரைச்சீலைகளில் படரும் ஒளியை வைத்தே காலையா மாலையா என உணரச்செய்தது அருமை. அதுபோல கதவை தட்டுவதும் பிளாட்டிற்கு வெளியே குண்டு மழை பொழிவதும் ஏதோ நாம் இருக்கும் திரையரங்கிற்குள்ளேயே நடப்பது போன்ற ஒலியமைப்பு இன்சிரியாவின் பதற்றத்தை பயத்தை பார்வையாளர்களுக்கும் கடத்துகிறது.
அவர்களது ஒருநாள் வாழ்க்கையே இவ்வளவு கடினமாக இருக்கும்பொழுது தொடர்ந்து பல மாதங்களாக வருடங்களாக போர் நிகழ்கிறதே, அவர்களது அன்றாட வாழ்க்கை? இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இப்படியான போர் என்ற கேள்வி படம் முடியும்பொழுது நம் மனதில் எழாமல் இருக்காது. சிரியாவின் உள்நாட்டுப் போர் குறித்து ஏதேனும் செய்திகளை இனி பார்த்தால் 'இன் சிரியா' கண்டிப்பாக நினைவுக்கு வரும்.
பிரெஞ்ச்-லெபனான் திரைப்படமான 'இன் சிரியா' பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.