மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
Updated on
1 min read

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து மிரட்டியது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையுடன் நடிகர் ரஜினி இமயமலை சென்றிருந்தார். இதையடுத்து, வடமாநிலங்களுக்குச் சென்றவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தனது பூர்விக கிராமத்துக்குச் சென்றிருந்த ரஜினி அங்கு தனது பெற்றோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், தற்போது மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், “ஆசிய மற்றும் சர்வதேச உலக அரங்கில் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தை இன்று சந்தித்தேன். திரையுலகில் அவர் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் அடுத்தாக ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனமாக சன்பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in