Published : 19 Dec 2017 05:22 PM
Last Updated : 19 Dec 2017 05:22 PM

CIFF-ல் டிசம்பர் 20 அன்று என்ன படம் பார்க்கலாம்? - ரமணி பிரபா தேவி பரிந்துரைகள்

TWO LOTTERY TICKETS / DOUALOZURI | DIR: PAUL NEGOESCU | ROMANIAN | 2016 | 86' அண்ணா, மாலை 7.15 மணி

ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் மூன்று பேருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இதற்காக இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்க முற்படுகின்றனர். அவர்களுக்கு அந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுகிறது. அந்தப் பணத்தை போய் வாங்குவதற்குள் அவர்களது லாட்டரி சீட்டு திருடு போய்விடுகிறது. மூவரும் ஆற்றொணா சோகத்திற்குத் தள்ளப்படுகின்றனர். லாட்டரி சீட்டைத்  தேடி அவர்கள் செல்லும் பயணம் நிறைய சாகச அனுபவங்களைத் தருகிறது.

 

FAMILY LIFE / VIDA DE FAMILIA | DIR: CRISTIAN JIMENEZ, ALICIA SCHERSON | CHILE / SPANISH | 2017 |103'  கேஸினோ பகல் 12.15 மணி

சாண்டியாகோவில் உள்ள தொலைதூர உறவினர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு இளைஞன் சில வாரங்கள் வந்து வீட்டுவேலைகளுக்கு உதவிகரமாக இருக்கிறான். அண்டைவீட்டில் உள்ள இளம்பெண் ஒருத்தியோடு நட்பு பாராட்டுகிறான். அவளுடன் நெருக்கமாகிறான். அதேநேரம் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் வேலைகளை தொடர்வது போலவும் பாசாங்கு செய்கிறான். ஸ்பானிய மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் சாம்ப்ரா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இயக்குநர் கிறிஸ்டியன் ஜிம்னெஸ், அலிசியா ஷெர்ஸன் இணைந்து மெல்லிய நகைச்சுவை இழையோட நாவலை படமாக்கியுள்ளார்கள்.

 

FILTHY | DIR: TEREZA NVOTOVA | CZECH REPUBLIC / SLOVAKIA /SLOVAK | 2017 |87' கேஸினோ. பிற்பகல் 2.45 மணி

லீனா 17 வயது சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். தனது முதல் காதல் அவளுக்கு பரவசமான அனுபவங்களைத் தருகிறது. ரகசிய இரவு நேர சாகசங்கள், காலைநேர மாயாஜாலங்கள் என டன்யூப் நகரத்தில் காதல் அனுபவங்கள் விரிகின்றன. ஆனால் எதிர்பாராமல் அவள் பாலியல் வன்முறைக்கு ஆளானபோது அவளது கனவுலகம் உடைந்துநொறுங்குகிறது. லீனா இனி ஒரு பயணத்தைத் தொடங்கவேண்டும்.

வயதுப்பருவத்தை நெருங்குவது சாதாரணம் இல்லை. அது தனக்குள்ளேயே நிகழும் ஒரு போராட்டம். அவளை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள். இனி அவள் எப்போதும் திரும்பமுடியாது, உண்மைதான். அதற்காக வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று இருக்கவேண்டியதில்லை. அவள் இன்னும் வளரவேண்டியது இருக்கிறது. நடந்ததை நினைத்து துவள வேண்டியதில்லை. அதை தான் செய்துவிட்ட குற்றமாக கருதி எந்தத் தண்டனையும் தனக்குத்தானே விதித்துத்துக்கொள்ளத் தேவையும் இல்லை என அவளுக்கு தோன்றத் தொடங்குகிறது.

 

THE CONFESSION / BERI | DIR: ZAZAURUSHADZE | GEORGIAN / ENGLISH | 2017 | 89' தேவி, மாலை 4.30 மணி

பாதிரியார் ஜியோர்கி, முன்னால் திரைப்பட இயக்குநரும் கூட. சிறிய மலை கிராமத்தில் சேவை செய்ய நினைக்கிறார். அங்கிருக்கும் மக்களை தேவாலயத்துக்கு அழைத்து வர, திரைப்படங்கள் திரையிடுகிறார். சம் லைக் இட் ஹாட் என்ற திரைப்படம் பார்த்தபின், உள்ளூரில் இருக்கும் இசை ஆசிரியர் லில்லி, மர்லின் மன்றோவை போல் இருப்பதாக கிராமத்தினர் கூறுகின்றனர். லில்லியை பார்த்த நொடி, பாதிரியாரின் வாழ்க்கை மாறுகிறது. ஆசையை தூண்டிவிடும் பேரழகியாக இருக்கும் அவளால் இவரது வாழ்க்கை என்ன ஆனது?

 

CRACKS IN THE SHELL/ DIE UNSICHTBARE | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN / DANISH / CHINESE| 2011 | 133'| தாகூர் திரைப்பட மையம், காலை 11.15 மணி

ஃபைன் திறமையான நடிப்புப் பயிற்சி மாணவி. அதேநேரம், கூச்சமுடையவள். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரி ஜூலை பார்த்துக் கொள்ள, அவளை தூங்க வைக்க பாடுவது, ஆடுவது, நடிப்பது என தனது திறமைகளை பயன்படுத்துகிறாள். ஆனால் பள்ளியிலோ அவள் தன்னம்பிக்கியின்றி இருக்கிறாள். புகழ்பெற்ற இயக்குநர் காஸ்பெர் ஃபீர்ட்மென் தனது அடுத்த படத்துக்கான நடிகைக்கான தேர்வை வைக்கிறார். ஃபைன் தனது திறமையால் அவரை ஈர்க்கிறாள். ஃபைனின் பாதிக்கப்பட்ட ஆளுமையும், குணமும், தனது அடுத்த படைப்பின் மைய கதாபாத்திரத்தைப் போலவே இருப்பதாக காஸ்பர் நினைக்கிறார். ஃபைனுக்கு அந்த பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஃபைன் நடிப்புக்காக தனது அடையாளத்தையே இழந்து அந்த பாத்திரமாகவே மாறுகிறாள். இது அவளது சகோதரியை பார்த்துக் கொள்வதிலும் எதிரொலிக்கிறது. இந்த ஆபத்தான விளையாட்டில் ஃபைனுக்கு, ஃபைனே எதிரியாக மாறுகிறாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x