சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.20 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.20 | படக்குறிப்புகள்
Updated on
2 min read

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை (டிசம்.20) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | BECAUSE I LOVE YOU / SARANGHAGI TTAEMOONE | DIR: JIHONGJU AS JUJI-HONG | KOREAN | 2017 | 110'

லீ ஹையோங் அற்புதமான பாடலாசிரியர், பாடகர், ஒரு எதிர்பாராத விபத்தில் இறந்தபிறகு அவரது ஆவி சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. பாடலாசிரியரின் ஆவி அன்பின் தூதனாக மாறி, அன்பைக் கண்டறிந்து, காதல் உணர்ச்சிகளில் சிக்கியுள்ளவர்களை இணைப்பதற்கான சக்தியைப் பெறுகிறார். ஒரு நபரின் உடலில் நுழைந்து அவரது காதல் கைகூடும் நிலையில் அந்நபரிடமிருந்து விடைபெறுகிறார். அழகான காதல் கதைகளை உள்ளடக்கிய இப்படம் வித்தியாசமான பொழுதுபோக்குத் திரைக்கதையைக்கொண்டது. பாடலாசிரியர்கள் எப்பொழுதும் காதலுக்கு துணைநிற்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் படம்.

பகல் 12.15 மணி | FAMILY LIFE / VIDA DE FAMILIA | DIR: CRISTIAN JIMENEZ, ALICIA SCHERSON | CHILE / SPANISH | 2017 |103'

சாண்டியாகோவில் உள்ள தொலைதூர உறவினர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு இளைஞன் சில வாரங்கள் வந்து வீட்டுவேலைகளுக்கு உதவிகரமாக இருக்கிறான். அண்டைவீட்டில் உள்ள இளம்பெண் ஒருத்தியோடு நட்பு பாராட்டுகிறான். அவளுடன் நெருக்கமாகிறான். அதேநேரம் அங்கு இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் வேலைகளை தொடர்வது போலவும் பாசாங்கு செய்கிறான். ஸ்பானிய மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் சாம்ப்ரா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இயக்குநர் கிறிஸ்டியன் ஜிம்னெஸ், அலிசியா ஷெர்ஸன் இணைந்து மெல்லிய நகைச்சுவை இழையோட நாவலை படமாக்கியுள்ளார்கள்.

பிற்பகல் 2.45 மணி | FILTHY / SPINA | DIR: TEREZA NVOTOVA | CZECH REPUBLIC / SLOVAKIA /SLOVAK | 2017 |87'

லீனா 17 வயது சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். தனது முதல் காதல் அவளுக்கு பரவசமான அனுபவங்களைத் தருகிறது. ரகசிய இரவு நேர சாகசங்கள், காலைநேர மாயாஜாலங்கள் என டன்யூப் நகரத்தில் காதல் அனுபவங்கள் விரிகின்றன. ஆனால் எதிர்பாராமல் அவள் பாலியல் வன்முறைக்கு ஆளானபோது அவளது கனவுலகம் உடைந்துநொறுங்குகிறது. லீனா இனி ஒரு பயணத்தைத் தொடங்கவேண்டும். வயதுப்பருவத்தை நெருங்குவது சாதாரணம் இல்லை. அது தனக்குள்ளேயே நிகழும் ஒரு போராட்டம். அவளை மற்றவர்கள் தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள். இனி அவள் எப்போதும் திரும்பமுடியாது. அதற்காக வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று இருக்கவேண்டியதில்லை. அவள் இன்னும் வளரவேண்டியது இருக்கிறது. நடந்ததை நினைத்து துவள வேண்டியதில்லை. அதை தான் செய்துவிட்ட குற்றமாக கருதி எந்தத் தண்டனையும் தனக்குத்தானே விதித்துத்துக்கொள்ளத் தேவையும் இல்லை.

மாலை 4.45 மணி | NUTS / NUTS | DIR: HENRI BARGES | ARABIC | 2017 | 104'

ஜென்னியும் லானாவும் நெருங்கிய தோழிகள். இருவரது சிந்தைனையிலும் இளமை ததும்புகிறது. அதனாலேயே பழமைவாதத்தைத் திணிக்கும் அவர்களது தேசத்தின் 'ஒழுக்கநெறிக் கோட்பாடுகள்' அவர்களை எரிச்சலூட்டுகிறது. சமூக கட்டமைப்புகள் மீதான அந்த எரிச்சல் விரக்தியை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து விடுபடுவதாக எண்ணி காசிம் என்ற ரவுடி கும்பலைச் சேர்ந்தவரை நெருங்குகின்றனர். காசிம் மூலம் அந்த ரவுடி கும்பல் முழுவதுமே அவர்களுக்கு பரிச்சயம் ஆகிறது. ஆரம்பத்தில், புதிய களம் அவர்களுக்கு புது எழுச்சி பாய்ச்சுகிறது. கிரிமினல் களத்தை காதலிக்கிறார்கள். ஆனால், விரைவிலேயே பழிதீர்க்கும் உணர்வு ஜென்னியையும் லானாவையும் ஆட்கொள்கிறது. அவர்கள் தொட்டுப்பார்த்த வன்முறை அவர்களது உயிருக்கே அச்சுறுத்தல் ஆகிவிடுகிறது. இந்தப் படத்தை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

பிற்பகல் 7.00 மணி | EUTHANIZER / ARMOMURHAAJA | DIR: TEEMU NIKKI | FINNISH | 2017 |83'

வன்முறைமிக்க ஒரு இருண்ட கோடையை சித்தரிக்கும் படம் யூதனைஸர். ஹாக்கா என்பவன் ஒரு மெக்கானிக். அவனது பகுதி நேர வேலை செல்லப் பிராணிகளை தூங்க வைப்பது. ஆனால் ஒரு மோசமான மனிதனின் நாயைக் காப்பாற்றப் போகும்போது என்ன நடந்தது? இத்திரைப்படம் விலங்கு மற்றும் பிராணிகளின் உரிமைகளை, பாதிப்புகளை மற்றும் அதன் இறப்புகளைப் பற்றி பேசுகிறது. ஆனால் இக்கதை இவ்வுலகின் நல்லது கெட்டது அம்சங்களைப் பற்றியதல்ல. மாறாக ஒரு முழுமையான மனிதனின் முட்டாள்தனம் பற்றியதாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in