

சென்னை: விஜய் மக்கள் இயக்க தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்சென்னை பனையூரில் நேற்று நடை பெற்றது. தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை வலுப்படுத்த வேண்டும். தலைமையின் உத்தரவு, புதிய அறிவிப்புகள், செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் உரிய ஹேஷ்டேக்குடன் பதிவிட வேண்டும். இயக்கத்துக்குள் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குழுக்கள் உள்ளன. அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.
இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களை இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம் என அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார்30 ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவும் ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்