Published : 14 Dec 2017 04:29 PM
Last Updated : 14 Dec 2017 04:29 PM

நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள் என சொல்வார்கள்: ஒரு குப்பைக் கதை இயக்குநர்

காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ், மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு குப்பைக் கதை'. இப்படத்தைப் பார்த்து பிடித்துவிடவே, இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அடுத்தாண்டு திரைக்கு வரவுள்ள இப்படம் 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று மாலை 6 மணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் திரையிடப்படவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் காளி ரங்கசாமியிடம் கேட்ட போது

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வானவுடன் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வருடந்தோறும் பாஸ் வாங்கி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் படம் பார்ப்பேன். உலக சினிமாக்களை வியந்து பார்த்த திரையில், நான் இயக்கிய படம் திரையிடப்படவுள்ளது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அந்த சந்தோஷத்துக்கு வார்த்தைகள் இல்லை.

சின்ன சின்ன விஷயங்களைப் பெரிதுப்படுத்தக் கூடாது. சாதாரண விஷயத்தை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இன்னும் எளிதாக இருக்கும். காதல், கணவன் - மனைவி உறவு, வேலை போன்றவற்றில் சிறு விஷயங்களை எல்லாம் கடந்து வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விட வேண்டும். சிறு விஷயத்துக்கே நாம் தயங்கி நின்றால், அமைதியாக இருக்கும் வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டுவிடும் என்ற கருத்தை தான் 'ஒரு குப்பைக் கதை' படத்தில் கூறியிருக்கிறேன். கணவன் - மனைவி இருவருக்குள் நடக்கும் கதை தான்.

நாயகனாக தெரிந்தவர்கள் நடித்திருந்தால், அவர்களுடைய உடல்மொழியில் நடித்திருப்பார்கள். ஆகையால் புதிய முகத்தை வைத்து தான் இப்படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு நடன இயக்குநர் தினேஷ் பொருத்தமாக இருந்தார்.

கண்டிப்பாக திரைப்பட விழாவில் காணவுள்ள அனைவருக்கும் படம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள் என சொல்வார்கள் என்ற ஆவலோடு, படம் முடிவடையும் தருவாயில் காத்திருப்பேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x