Published : 15 Dec 2017 10:15 AM
Last Updated : 15 Dec 2017 10:15 AM

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: திரைப்பட விழாக்களை சிறப்பாக நடத்த அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு நடிகை சுஹாசினி கோரிக்கை

திரைப்பட விழாக்களை சிறப்பாக நடத்த அண்டை மாநிலங்களைப்போல நம் அரசு அதிக அளவில் நிதி அளிக்க வேண்டும் என்று நடிகை சுஹாசினி கோரிக்கை வைத்துள்ளார்.

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அரவிந்த்சாமி கலந்துகொண்டார். இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், அதன் பொதுச் செயலாளரும் திரைப்பட விழாவுக்கான இயக்குநருமான தங்கராஜ், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பிரதிநிதி சுரேஷ், நடிகை சுஹாசினி, தைவான் நாட்டின் சார்லஸ், அமெரிக்காவைச் சேர்ந்த மே கென்ட், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் கெல்லி, பிரான்ஸ் திரைப்பட அமைப்பைச் சேர்ந்த பெஃர்ரி, ஜெர்மனியைச் சேர்ந்த அஷிம் பையாக், கொரியாவைச் சேர்ந்த யாங் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

விழா ஏற்பாட்டு குழுவில் ஒருவரும், நடிகையுமான சுஹாசினி தொடக்க விழாவில் பேசியதாவது:

இங்கு நடத்தப்படும் திரைப்பட விழாவைப் போல ஆண்டுதோறும் கர்நாடக அரசும் திரைப்பட விழா நடத்துகிறது. இந்த முறை கர்நாடக திரைப்பட விழாவுக்கு அந்த மாநில அரசு ரூ.10 கோடி நிதி அளித்துள்ளது. ஆனால், இங்கு போதுமான தொகை இல்லாமல் சிரமப்படுகிறோம். கர்நாடகாவில் கிடைக்கும் நிதியைப் போல நமக்கும் கிடைத்தால், இந்திய அளவில் சிறப்பான விழாவாக இதை நடத்திக் காட்ட முடியும். அடுத்து வரும் ஆண்டுகளிலாவது கர்நாடக அரசு அளவுக்கு இல்லாவிட்டாலும், அதில் பாதி தொகையாவது தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் அரவிந்த்சாமி பேசியதாவது:

ஒவ்வொரு முறையும் திரைப்பட விழா நடத்த விழாக் குழுவினர் மிகவும் சிரமப்படுகிறார்கள். தொடர்ந்து என் ஆதரவு இந்த குழுவினருக்கு உண்டு.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இங்கு தணிக்கை சான்றிதழ் பெறும் முறையை நினைத்து பயப்பட வேண்டியுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பத்திய உறவு முறைகளைக்கூட புத்தகங்கள் வாயிலாக எளிதாக சொல்ல முடிந்தது. இன்றைக்கு படங்களில் முத்தக் காட்சிகளை வைப்பதே சிரமமாக இருக்கிறது. படங்களில் காதல் காட்சிகளைவிட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகம் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x