Last Updated : 18 Dec, 2017 07:31 PM

 

Published : 18 Dec 2017 07:31 PM
Last Updated : 18 Dec 2017 07:31 PM

மக்களின் எண்ணோட்டம் மாறியிருக்கிறது: விதார்த்

15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விதார்த் நாயகனாக நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு' மற்றும் 'குரங்கு பொம்மை' ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. மேலும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் 'மகளிர் மட்டும்' படமும் திரையிட இருக்கிறார்கள். ஒரே விழாவில் தனது 3 படங்கள் திரையிடவுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் விதார்த்.

தனது சந்தோஷத்தை விதார்த் பகிர்ந்து கொண்ட போது கூறியதாவது:

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை எடுத்துக் கொண்டு அமெரிக்க திரைப்பட விழாவுக்குச் சென்றேன். 'குற்றமே தண்டனை' எடுத்துக் கொண்டு லண்டன் சென்றேன். நமது திரைப்படங்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே என்ற சந்தோஷம். வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. அதில் எனது 3 படங்கள் கலந்து கொள்வது கூடுதல் சந்தோஷம்.

நாயகனாக நடித்த 2 படங்கள் திரையிட இருக்கும் போது, நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று எண்ண முடிகிறது. முன்பு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம் என்றாலே, கலை வடிவத்தோடு இருக்கும் என்ற எண்ணோட்டம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் மாறியிருக்கிறது. பலருமே எந்த திரைப்பட விழாவில் விருது வாங்கியதோ, அதை படத்தின் போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார்கள். அதுவே நல்லதொரு மாற்றம் தானே.

மக்களிடையே திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய படம் என்றால் தரமான படமாக இருக்கும் என்ற எண்ணோட்டம் வந்திருக்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலுமே திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம் என்றால் முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளனர். நல்ல தரமான படம் எடுத்தால் திரைப்பட விழாக்களில் மட்டுமல்ல மக்களிடையேயும் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

முன்பெல்லாம் திரைப்பட விழாக்கள் என்றாலே வெளிமாநில மற்றும் இதர மொழி படங்கள் தான் கலந்து கொள்ளும். 12 தமிழ் படங்கள் கலந்து கொள்வதே, நாம் எந்தளவுக்கு தரமான படங்களை உருவாக்குகிறோம் என்பதற்கு சான்று.

இவ்வாறு விதார்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x