Published : 16 Dec 2017 02:09 PM
Last Updated : 16 Dec 2017 02:09 PM

சென்னை சர்வதேச திரைப்பட விழா: மாணவர் பக்கம் - ஈசி (Easy)

15வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் 15.12.17 அன்று திரையிடப்பட்டது ஈசி (EASY).

கதை சுருக்கம்

சிறு வயதில் கார் பந்தய வீரராய் இருந்து நாளடைவில் உடல் எடை கூடிவிட்டபடியால் கார் ஓட்ட முடியாமல் போக,  மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார் கதாநாயகன் ஈசி. அதன் பிறகு அவரது சகோதரன் அவரிடம் ஒரு வேலையைத் தர அதை செய்து முடித்தாரா இல்லையா என்பதை சொல்லிருக்கும் படமே ஈசி.

பார்வை

படத்தில் ஈசி கதாபாத்திரத்தில் வரும் நிக்கலோ நோசில்லா தன் எதார்த்தமான நடிப்பால் நம்மை வெகுவாகக் கவர்கிறார். படத்தில் ப்ளாக் காமெடி நிறைந்துள்ளது. வசனங்கள் குறைவாகவே இருந்தாலும் நகைச்சுவையாக உள்ளது. லுகா கியுடின் பின்னனி இசை படத்தை நகர்த்திச் செல்லும் விதம் அழகு. ஈசி படத்தின் முக்கிய கருவே இத்தாலியிலிருந்து உக்ரேனியா செல்லும் ஒருவரின் பயணம் தான். அதனை கூடுமானவரை சுவாரசியமாகவே சொல்லியுள்ளார், இயக்குநர் அன்டரியா மேக்னினி.

சிறுசிறு கதாபாத்திரத்தில் வரும் நடிகர்கள்கூட நம்மை சிரிக்க வைக்கத் தவறவில்லை. படத்தில் இத்தாலியில் இருந்து உக்ரேனியாவுக்கு செல்வது போன்ற காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குக்குரியது. படத்தில், உக்ரேனியாவில் ஒப்படைக்கச் சொல்லி சவப்பெட்டி ஒன்றை, ஈசியின் சகோதரன் அவரிடம் தருவார். ஆனால் அந்த சவப்பெட்டி ஆற்றில் அடித்து சென்று விடும். அதைக் காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதிக்கும் பொழுது ஈசி கதாபாத்திரத்தின் தன்மை ரசிகர்களை ஈர்க்கிறது.

அதே போல, உக்ரேனியாவின் நெடுஞ்சாலை ஒன்றில் ஈசியின் காரை ஒருவர் முந்திக்கொண்டு போய், ஈசியைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பார். அடுத்து ஈசி அவரை முந்திச்செல்லும் காட்சியில் ஒட்டுமொத்த அரங்கமுமே ஆரவாரம் செய்தது. படத்தில் எந்த அளவுக்கு நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சிரிக்கவும் சிந்திக்கவும் சமமான விகிதத்தில் காட்சிகளை அமைத்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்,இயக்குநர் அன்டரியா மேக்னினி.

விருதுகள்

ஈசி படத்திற்காக இயக்குநர் அன்டரியா மேக்னினி Prize for the Best Emerging Director, Golden Leopard Filmmakers of the Present – Nescens Prize, Locarno International Film Festival – Filmmakers of the Present: Special Mention உள்ளிட்ட சில விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த விமர்சனம் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே

koushikjpgஇந்த கட்டுரையை எழுதியவர் கௌசிக் சீனிவாசன் - கல்லூரி மாணவர், சினிமா ஆர்வலர் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x