Last Updated : 20 Nov, 2017 04:31 PM

 

Published : 20 Nov 2017 04:31 PM
Last Updated : 20 Nov 2017 04:31 PM

திரைத்துறையில் ஆண்களும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்: ராதிகா ஆப்தே

திரைத்துறையில் பெண்கள் மட்டுமல்ல நிறைய ஆண்களும் தவறாக நடத்தப்படுகிறார்கள் என நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஹாலிவுட்டில் ஹார்வீ வீன்ஸ்டீன் பாலியல் சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியது. இதனால், பொதுவாக பொழுதுபோக்குத் துறையில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பலர் பேச ஆரம்பித்துள்ளனர்.

பாலிவுட்டில், இர்ஃபான் கான் முன்வந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். தற்போது பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவும் இதுகுறித்து பேசியுள்ளார்.

"பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். நான் குறிப்பாக எனது துறையைப் பற்றி பேசுகிறேன். எனக்குத் தெரிந்தே பல ஆண்களுக்கு அந்த அனுபவம் நேர்ந்துள்ளது. இதை வெளியில் சொல்ல இதுதான் சரியான நேரம்.

சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருப்பவர்களோ, சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ மட்டும் துறைக்கு வருவதைத் தாண்டி பல தரப்பைச் சேர்ந்தவர்களும் இந்தத் துறைக்குள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேச ஒரு தளம் முக்கியம்.

தங்கள் நிலையில் இருக்கும் அதிகாரத்தை வைத்து மற்றவர்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் பற்றி வெளியே தெரிய வேண்டும். அதே நேரத்தில், சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எனவே இது இரு தரப்பிலும் மாற வேண்டிய விஷயம்.

மறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். தான் சுயநலமாக பயன்படுத்தப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கண்டிப்பாகக் கிடைக்கும். சிலர் வீட்டிலிருந்து எந்த ஆதரவுமின்றி ஓடி வருகிறார்கள். அவர்களுக்கு இந்தத் துறையில் யார் துணையும் இருக்காது. துறையில் மேம்பட்ட ஒருங்கிணைப்பு, விதிகள், வெளிப்படைத்தன்மை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களின் பெயரை வெளியே சொல்வதில் இன்னும் பாலிவுட்டில் பயம் இருக்கிறது. ஏனென்றால் இன்னும் பாலிவுட்டை, யாராலும் நெருங்க முடியாத ஒரு மாயாஜாலக் கோட்டை என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. இது வேலை செய்யுமிடம். வேலைக்கான நெறிமுறைகள் அனைத்து நிலைகளிலும் அறிமுகப்படுத்தப்படவேண்டும். எது நடந்தாலும், தைரியமாக வெளியே வந்து பெயர்களைச் சொல்ல வேண்டும்.

யார் நம்மை நம்புவார்கள் என்ற அச்சமும் இருக்கிறது. தவறு செய்பவரிடம் அதிகாரம் இருக்கிறது. எனது புகார் கவனிக்கப்படாமல் போகும். அது என் வேலையை பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. அது மாற வேண்டும். தைரியமாக குரலெழுப்ப வேண்டும்" என்று ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x