

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், பசுபதி, திஷா பதானி உட்பட பலர் நடிக்கும் படம், ‘கல்கி 2829 கி.பி’. வைஜயந்தி மூவிஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்ச்சியில் அறிவிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரபாஸ், நாக் அஸ்வின், ராணா உட்படக் கலந்துகொண்டனர்.
இதில் நடிப்பது பற்றி கமல்ஹாசன் கூறும்போது, “இந்தப் படத்தில் நான் நடிப்பதை யாரும் நம்பவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், சான் டியாகோவில் என் கையைப் பிடித்துக்கொண்டு இந்தப் படத்தின் நாயகன் பிரபாஸ், ‘இதில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் என்பதை இன்றுவரை நம்ப முடியவில்லை. உங்களை எப்படி அவர்கள் இந்தப் படத்துக்கு அழைத்து வந்தார்கள் என்பது ஆச்சரியம்’ என்று சொன்னதுதான். இந்தப் படத்தில் பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கதையை விட வேறு எதுவும் பெரிதில்லை என்பதைப் புரிந்துகொள்ளும் தன்மை அனைவரிடமும் இருக்கிறது” என்றார்.