Last Updated : 28 Nov, 2017 05:57 PM

 

Published : 28 Nov 2017 05:57 PM
Last Updated : 28 Nov 2017 05:57 PM

ஜஸ்டிஸ் லீகை முந்திய கோகோ: சாதனையை தொடரும் டிஸ்னி - பிக்ஸார்

டிஸ்னி - பிக்ஸாரின் அனிமேஷன் படமான 'கோகோ' கடந்த வாரம் வெளியான 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை முந்தி பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

டிஸ்னி மற்றும் பிக்ஸார் நிறுவனங்கள் இணை தயாரிப்பில் வெளியாகியிருக்கும் அனிமேஷன் படம் 'கோகோ'. அமெரிக்காவில் தாங்க்ஸ்கிவிங் (Thanksgiving) விடுமுறை தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியானது. அதிக நேர்மறை விமர்சனங்களுடன், பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை 'கோகோ' பெற்றது. அதனால் கடந்த புதன்கிழமை முதலே படம் வசூல் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது.

புதன் கிழமை தொடங்கி ஞாயிறு வரை 71.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களை மட்டும் கணக்கெடுத்தாலும் 50.8 மில்லியன் டாலர்களை வசூலித்தது. சர்வதேச அளவில் ஏற்கனவே மெக்ஸிகோவில் வெளியாகி, அங்கு அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை 'கோகோ' படைத்துவிட்டது. மேலும் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் கடந்த வாரம் வெளியானது. தற்போது இதன் சர்வதேச வசூல் 82.2 மில்லியன் டாலர்களாகும். மொத்த வசூல் 153 மில்லியன் டாலர்களாகும்.

இதற்கு முந்திய வார இறுதியில் வெளியான 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியையும், வசூலையும் பெறவில்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை என்ற அளவில் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வார இறுதியில் 40.7 மில்லியன் டாலர்களை ஜஸ்டிஸ் லீக் வசூலித்தது. தாங்க்ஸ்கிவிங் விடுமுறை நாட்களையும் சேர்த்தால் 5 நாட்களில் 59.6 மில்லியன் டால்ர்கள் வசூல். தற்போது இதன் ஒட்டுமொத்த வசூல் 481.3 மில்லியன் டாலர்களாகும்.

தாங்க்ஸ்கிவிங்கை முன்னிட்டு படம் வெளியிடுவது டிஸ்னி நிறுவனத்தின் வழக்கம். கடந்த வருடம் இதே நேரத்தில் 'மோனா' திரைப்படம் வெளியானது. அதுவும் வசூலில் சாதனை படைத்தது. இதற்கு முன், தாங்க்ஸ்கிவிங்கில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்கள் என்ற பட்டியலில் முதல் பத்து இடங்களில் டிஸ்னி/பிக்சாரின் 8 படைப்புகள் இடம்பெற்றிருந்தன. தற்போது கோகோவும் இதில் இணைந்துள்ளதால் முதல் 9 இடங்களையும் டிஸ்னி/பிக்ஸார் கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x