Published : 03 Apr 2014 10:56 AM
Last Updated : 03 Apr 2014 10:56 AM

சட்டத்துறையில் இருந்து வெள்ளித்திரைக்கு

புதிய இளைஞர்கள் தமிழ் சினி மாவில் நாயகர்களாக களம் இறங்கும் காலம் இது. அந்த வரிசை யில் புதிதாகச் சேர்ந்திருக்கிறார் புஷ்கின் ராஜ்குமார். சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் தில் பி.எல். ஹானர்ஸ் படித்துவரும் இவர், ‘மேல்’ படத்தின் மூலம் நாய கனாக அறிமுகமாகிறார். சட்டத் துறையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் இந்த இளம் நாயகனைச் சந்தித்தோம்.

சட்டத்துறையில் இருந்து நீங்கள் எப்படி திரைத்துறைக்கு வந்தீர்கள்?

சினிமா துறையில் எனக்கு பெரிய ஆர்வமெல்லாம் இருந்தது கிடையாது. ‘மேல்’ படத்தின் இயக்குநர் அருள், தனது கதைக்கு பொருத்தமான ஒரு ஹீரோவை தேடிக் கொண்டிருந்தார். அவரது நண்பர் இளங்கோ எங்களுக்கும் குடும்ப நண்பர். அவர்தான் என்னுடைய போட்டோவை அருளிடம் காட்டியிருக்கிறார். ஒரு முறை எனக்கு தெரியாமலே என்னை நேரில் பார்த்திருக்கிறார் அருள். அவருக்கு என்னை பிடித்துப்போக என் அப்பாவிடம் வந்து பேசியிருக்கிறார். முதலில் எனக்கு இந்தப் படத்தில் நடிக்க சிறிது தயக்கம் இருந்தது. எனக்கு நடிப்பெல்லாம் வருமா என்று யோசித்தேன். ஆனால் அப்பாவும், இயக்குநர் அருளும் எனக்கு நம்பிக்கை கொடுத்ததால் துணிந்து ‘ஓகே’ சொல்லிவிட்டேன். இப்போது படம் முடியப் போகிறது. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நானும் வீணாக்கவில்லை.

ஒரு சினிமா என்றால் டான்ஸ், சண்டை என்று பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமே?

சிறு வயதில் இருந்தே நான் கராத்தே பயின்றிருக்கிறேன். அப் போதே பிரஸ் கிளப்பில் எனக்கு ‘சாதனை இளசு’என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். அதோடு ஒரு பொழுதுபோக்குக்காக சிறு வயதில் டான்ஸ் கற்றுக்கொண்டதும் இப் போது கைகொடுத்திருக்கிறது.

காதல் காட்சிகளை எப்படி சமாளிச்சீங்க?

நல்லவேளையா இந்த படத்தில் எனக்கு ஜோடியே இல்ல. படத்துல ஜோடி இல்லாததால் காதலிக்கிற கஷ்டமும் இல்லே. டூயட்டும் இல்ல. அதுக்கு மேல சொல்ல ஆரம்பிச்சா படத்தின் கதையை நான் சொல்லிடுவேன். அதனால் விட்டுடுங்க.

அடுத்த திட்டம்?

இந்தப் படம் முடியறதுக்கு உள்ளேயே அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைச்சிருக்கு. ‘மனம் கொத்தி பறவை’ படத்தின் தயாரிப் பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன். டைரக்டர் சந்துருவும் அவருடைய அடுத்த படத்திற்கு என்னை ஹீரோவாக புக் பண்ணியிருக்கார். இந்தப் பயணம் வெற்றிகரமா இருக்கும்னு நம்பறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x