Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

பெரம்பலூர் அருகே வைரஸ் காய்ச்சல்: 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: ஒரு மாதத்தில் 3 பேர் இறந்ததால் மக்கள் பீதி

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.

இந்த காய்ச்சலால் கல்லையில் கடந்த 1 மாதத்தில் 3 பேர் பலியாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ளது கல்லை கிராமம். கடந்த 3 மாதங்களாக காய்ச்சலில் அவதிப்படுவோர் எண்ணிக்கை இந்த கிராமத்தில் படிப்படியாக அதிகரித்துள்ளது. சில நாள் காய்ச்சல், பல வார கை,கால் மூட்டு வலி, என சிக்குன் குனியா காய்ச்சலுக்கான அறிகுறிகளை கொண்டிருந்தாலும், ஒரு சிலரை 2-வது முறையாக இந்த காய்ச்சல் பாதித்துள்ளது.

அவர்களில் கிருஷ்ணகோனார், அஞ்சலை ஆகியோர் கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மாரியம்மன் கோயில் தெரு கந்தசாமி மகன் கொளஞ்சிநாதன் சனிக்கிழமை காய்ச்சலால் இறந்தார். மேலும் இங்கு 2 முதியவர்கள் கவலைக்கிடமாக உள்ளதால் காய்ச்சல் பாதித்த ஏனையோர் பீதி அடைந்திருக்கின்றனர்.

ஆனால், மக்கள் பதட்டப்படும் அளவிற்கு விபரீதம் எதுவும் இல்லை என்று மறுக்கிறார்கள் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள். மேலும், இது வைரஸ் காய்ச்சல் என தெரியவந்தபோதும் டெங்குவா, சிக்குன் குனியாவா என உறுதிப்படுத்தும் சோதனை முடிவுகள் கிடைத்த பிறகு மருத்துவ சேவைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்ம் என்றனர்.

இறந்தவர்கள் அனைவரும் வயதில் மூத்தோர் என்பதால் காய்ச்சல் தவிர்த்து இதர காரணங்களும் இருக்கலாம். வேப்பூர், அரியலூர் மருத்துவமனைகளில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ வசதியோடு சித்த மருத்துவர்கள் அடங்கிய அரசு மருத்துவ குழு ஒன்றும் கிராமத்தில் முகாமிட்டு பணியாற்றுவதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x