Published : 02 Jul 2014 11:01 AM
Last Updated : 02 Jul 2014 11:01 AM

நீதிபதி சந்துரு நூலுக்கு கருணாநிதி பாராட்டு

உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு எழுதியுள்ள நூலுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை:

உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஓய்வுபெற்ற பிறகு, தனது சட்ட அனுபவங்களை கட்டுரைகளாகத் தீட்டி வருகிறார். அவர் பதவியில் இருந்தபோது வழங்கிய சில முக்கிய தீர்ப்புகளைத் தொகுத்து, ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற சிறப்பான தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். அதில் 15 தீர்ப்புகள் வெளியாகியுள்ளன. அந்தத் தலைப்புகளைப் பார்த்தாலே, நீதிபதி சந்துரு யார் என்பதை புரிந்துகொள்ள முடியும். இட ஒதுக்கீடு, சாதி மறுப்புத் திருமணங்கள், தீண்டாமைச் சுவர் தகர்ந்தது, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் சிறுமிகள், தலித்துகளின் வாழ்வுரிமை, பஞ்சமி நிலம், மத மாற்றம், நூலகத்துக்கு வந்த கேடு, கோயில்களில் வழிபாட்டுரிமை என்பது உள்பட பதினைந்து தலைப்புகளில் நீதிபதி சந்துரு, தான் வெளியிட்ட தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு தீர்ப்புக்கும், அம்பேத்கர் சொன்ன தத்துவங் களை இணைத்து, இந்த நூலின் தலைப்பான அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் என்பதை நிலைநாட்டியிருக்கிறார். அம்பேத்கர் சொல்லியுள்ள கருத்துகள் பெரியார், அண்ணாவின் கருத்துகளோடு ஒருமித்த கருத்துகள் என்பதையும், அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான், நீதிபதி சந்துரு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன்.

நீதிபதி சந்துரு வழங்கிய பல தீர்ப்புகளை, குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்குகளிலே அவர் அளித்த தீர்ப்புகளை உள்ளடக்கி, இந்த நூல் அமைந்திருப்பது திமுகவினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். வேறு எந்த உள்நோக்கமும் அல்ல. இத்தகைய தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி சந்துரு திமுக அரசையும், ஏன் என்னையும்கூட விமர்சனம் செய்தவர் என்றுகூடச் சொல்வார்கள். இருந்தபோதிலும், இந்த நூலில் அவர் எழுதிய தீர்ப்புகளைப் பாராட்டுகின்ற வகையில்தான் இதை எழுதினேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x