“படிப்பறிவில்லாத அரசியல் தலைவர்கள்” - சர்ச்சைக்குப் பின் கஜோல் விளக்கம்
மும்பை: நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று கஜோல் கூறிய கருத்து இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கஜோல் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, “இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாற்றம் என்பது மெதுவாகத்தான் நடக்கும். மிக மிக மெதுவாகத் தான் நடக்கும். ஏனெனில் நாம் நம்முடைய பாரம்பரியங்கள் மற்றும் செயல்முறைகளில் மூழ்கியுள்ளோம். நிச்சயமாக அது கல்வியுடன் தொடர்புடையது. படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள்தான் நம்மை ஆண்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கும் கண்ணோட்டம் என்பதே இல்லை. அது கல்வி மூலம்தான் கிடைக்கும். குறைந்தபட்சம் மாறுபட்ட கண்ணோட்டத்துக்கான வாய்ப்பையாவது கொடுக்கும்” என்று கூறியிருந்தார்.
கஜோலின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலரும் கஜோலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது கருத்து குறித்து கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன். எந்தவொரு அரசியல் தலைவரையும் சிறுமைப்படுத்துவது எனது நோக்கமல்ல.நாட்டை சரியான திசையில் வழிநடத்தும் உயர்ந்த தலைவர்கள் நமக்கு கிடைத்திருக்கின்றனர்." இவ்வாறு கஜோல் தனது பதிவில் கூறியுள்ளார்.
