Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா வெளிநாடு செல்ல ராணுவம் அனுமதி

தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா, 20 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் விந்தை சுவரீ கூறும்போது, “ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கான தேசிய கவுன்சிலின் (என்சிபிஓ) பணிகளுக்கு ஷினவத்ரா எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

எனவே, அவர் கேட்டுக்கொண்டபடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள என்சிபிஓ அனுமதி அளித்துள்ளது” என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. யிங்லக் ஷினவத்ரா அரசு அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான தக்ஷின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 2006-ம் ஆண்டு ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தக்ஷின் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து கடந்த மே 22-ம் தேதி அந்நாட்டு ராணுவம் பிரதமர் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ஷினவத்ரா உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தற்காலிகமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

“அரசுக்கு எதிராக தொடர்ந்து 6 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு செயலிழந்ததுடன், போராட்டம் காரணமாக 28 பேர் கொல்லப்பட்டனர்.

எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது” என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிரயுத் சான்-ஒச்சா தெரிவித்தார்.

தனது சகோதரர் தக் ஷினின் 65-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அடுத்த வாரம் பாரிஸ் செல்ல ஷினவத்ரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x