

லஹரி இசை நிறுவனம் ‘நீ போதும்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளது. பெண்களின் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த வீடியோ ஆல்பத்தில் நிரஞ்சனி அசோகன் நாயகியாக நடித்துள்ளார். வம்சி குருகுரி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். சுரேந்திரன் ஜோ எழுதிய பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகை மீனா, ஷாம், பரத், இயக்குநர்கள் பரத், அரவிந்த் ஸ்ரீதர் ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில் மீனா பேசும்போது, “பல வருடங்களுக்கு முன் நானும் விக்ரமும் ‘காதலிசம்’ என்ற ஆல்பத்தில் இணைந்து நடித்தோம். அந்தச் சூழலில் ஆங்கிலம், இந்தி ஆல்பங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் தமிழில் எங்கள் ஆல்பத்தை எப்படி வெளியிடுவது, மக்களிடம் எப்படி சேர்ப்பது என்ற வழி தெரியாததால் ரிலீஸ் ஆகாமலேயே போய்விட்டது. இசை ஆல்பம் குறித்து இப்போது எல்லோருக்கும் தெரிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.