

சென்னை: 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நிறைவுபெற்றது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னையில் உள்ள நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரவு 9 மணியைத் தாண்டி 12 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.
நடிகர் விஜய்யும் களைப்பின்றி தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்கினார். மொத்தம் 1400 பேர் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைவருக்கும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார்.
இரவு 11 மணிக்கும் மேலாக நீட்டித்த இந்த நிகழ்வு தற்போது நிறைவுபெற்றது. நிறைவுபெற்றதும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவித்த நடிகர் விஜய், இறுதியாக ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்து விழாவை நிறைவு செய்தார்.