Last Updated : 25 Oct, 2017 10:29 AM

 

Published : 25 Oct 2017 10:29 AM
Last Updated : 25 Oct 2017 10:29 AM

சினிமாவில் கதைகளை வரைந்தவர்

லையாள சினிமாவின் முழுமையான நடிகராக (Complete Actor)மோகன்லால் முன்னிறுத்தப்படுவது உண்டு. அதுபோல முழுமையான இயக்குநர் (Complete Director) என்ற பெயருக்குப் பொருத்தமானவர் ஐ.வி.சசி. ‘உல்சவம்’ படத்தில் இயக்குநராகி அறிமுகமாகி, கதை சொல்லலில் அத்தனை சாத்தியங்களையும் தனது சினிமாக்கள் மூலம் முயன்று பார்த்தவர் சசி. இயக்கம் என்ற ஒரு துறையை மட்டும் எடுத்துக்கொண்டு இயங்கியவர். சரித்திரம், காதல், குடும்பம், த்ரில்லர், நகைச்சுவை போன்ற பல தரப்பட்ட அம்சங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கியவர். இந்தப் படங்களின் மூலம் பலதரப்பட்ட ரசனைகள் கொண்ட ரசிகர்களின் இயக்குநராக இருந்தார் சசி.

ஐ.வி.சசி, கலைத் துறையில் உதவியாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர். சினிமா இயக்க வேண்டும் ஆர்வமில்லாதவராக கலை இயக்கத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தி வந்தவர். சசியின் நண்பரான மலையாள இயக்குநர் ஹரிஹரன் அப்போது உதவி இயக்குநராகப் பணியாற்றிவந்தார். அந்தச் சமயத்தில் ஏ.பி.ராஜ் இயக்கிய ‘கண்ணூர் டீலக்ஸ்’ என்ற படத்துக்கு உதவியாளர்கள் தேவைப்பட, ஹரிஹரன் கேட்டுக்கொண்டதால் சசி அதில் உதவி இயக்குநர் ஆனார். ஆனால், அந்த வேலையை அவரால் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அதனால் தயாரிப்பாளரின் விமர்சனத்துக்கு ஆளானார். இந்த அனுபவத்தால், ‘தான் ஒரு படம் இயக்கிக் காட்ட வேண்டும்’ என்ற பிடிவாதம் கொண்டார். அதுதான் அவரை இயக்குநராகவும் ஆக்கியது. தான் இயக்குநர் ஆனதற்கான காரணமாக இந்தச் சம்பவத்தையும், இயக்குநர் ஹரிஹரனையும் நடிகர் கமல்ஹாசனையும் எப்போதும் அவர் நினைவுகூர்வது உண்டு. கமல்ஹாசன், சசியின் ‘அவளுட ராவுகள்’படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சசியின் ‘அலாதீனும் அற்புத விளக்கும்’, ‘விருத்தம்’, ‘அனுமோதனம்’ உள்ளிட்ட பல படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். ரஜினிகாந்தை மலையாளத்தில் அறிமுகம் செய்த பெருமையும் சசிக்கு உண்டு. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்தியில் ராஜேஷ் கன்னா ஆகியோரை வைத்து நேரடிப் படங்களையும் சசி இயக்கியுள்ளார்.

‘இன்ஸ்பெக்டர் பல்ராம்’ என்ற கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு மூன்று வெற்றிப் படங்களை மம்மூட்டிக்குப் பெற்றுத் தந்ததுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘தேவாசுரம்’ மோகன்லாலுக்கு மிகப் பெரிய ரசிகத் திரளைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார்களாக நிலைபெற்றுவிட்ட மோகன்லாலுக்கும், மம்மூட்டிக்கும் இந்த இடத்துக்கு வந்துசேர சசியின் படங்கள், எண்பதுகளில் ஏணிப்படிகளாக இருந்தன.

எம்.டி.வியின் கதையில் வெளிவந்த ‘ஆள்கூட்டத்தில் தனியே’ சசியின் தனித்துவமான படமாக அறியப்படுகிறது. மோகன்லாலும் மம்மூட்டியும் இணைந்து நடித்த இந்தப் படம் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியது. அவரது மனைவியான சீமா மையப் பாத்திரமாக நடித்திருப்பார். ஒரு வணிக சினிமா இயக்குநர், ‘உதிரிப்பூக்கள்’ செய்ததுபோல் இந்தப் படம் காலம் கடந்து வியக்கவைக்கிறது.

சசியின் மிகத் துணிச்சலான படமாக இன்றும் போற்றப்படும் ‘அவளுட ராவுகள்’படத்திலும் சீமாதான் கதாநாயகி. இந்திய தணிக்கைத் துறையின் ‘ஏ ’சான்றிதழ் பெற்ற முதல் படமான இந்தப் படம் சசிக்கு மிகப் பெரிய விமர்சனத்தைத் தேடித் தந்தது. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆபாசப் படமாகத் தோன்றும் இந்தப் படத்தில் சசி, வறுமை, குற்றவுணர்வு, அதனால் உருவாகும் காதல் என மனித மனத்தின் உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்.

அதுபோல ரஞ்சித்தின் கதையில், சசி இயக்கிய ‘தேவாசுரம்’ மலையாளத்தின் கிளாசிக் படங்களில் ஒன்று. கதையாக வாசிக்கும்போது ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் கதை எனச் சுருங்கித் தெரியக்கூடிய இதை சசி தன் இயக்கத்தால் காவியமாக்கியிருப்பார். ராமாயணப் பாத்திரமான ராவணனுடன் சிலப்பதிகார நாயகியான கண்ணகியை மோதச் செய்திருப்பார். பாண்டிய மன்னனின் சபையில் கண்ணகியைப் போல், பானுமதி ராவணனின் சபையில் சலங்கையை எறிவாள். பார்வையாளர்களின் உணர்ச்சிகள் வீசி எறியப்பட்ட சலங்கையின் மீது குவியும் விதமாக அந்தக் காட்சியை சசி எடுத்திருப்பார்.

அதன் இறுதிக் காட்சியில் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்வையாளர்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் காட்சி அவரது ஆளுமைக்கு ஓர் உதாரணம். ‘தேவாசுரம்’ மட்டுமல்லாது அவரது சினிமாக்களின் காட்சிகள் வரைந்து வைத்த ஓவியத்தைப் போன்றவை.

பொருளோ கதாபாத்திரங்களோ பின்னிருப்பவர்களோ அவர் தீர்மானித்த அளவுகளில் விலகாமல் இருப்பார்கள். சசி ஒரு ஓவியர். சினிமாவில் கதைகளை வரைந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x