Last Updated : 10 Oct, 2017 12:50 PM

 

Published : 10 Oct 2017 12:50 PM
Last Updated : 10 Oct 2017 12:50 PM

திரையரங்க டிக்கெட் கட்டண உயர்வு: மக்களின் சாடலுக்கு தயாரிப்பாளரின் பதில்

திரையரங்க டிக்கெட் கட்டண உயர்வு குறித்து சமூகவலைத்தளத்தில் நிலவிய மக்களின் சாடலுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு பதிலளித்திருக்கிறார்.

தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக Single Screens எனச் சொல்லப்படும் திரையரங்குகளில் மிகவும் குறைந்த விலையை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.

டிக்கெட் விலை உயர்வைத் தொடர்ந்து, சமூகவலைத்தளத்தில் பலரும் "இனிமேல் திருட்டு விசிடியில் படம் பார்த்துவிட வேண்டியது தான்" என்று கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மக்கள் மாறி மாறி திரைத்திறையை திட்டிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சில விஷயங்களை தெளிவுபடுத்தலாம் என்று தோன்றியது. ஏதோ பொறுமை உள்ளவர்கள் படித்து, புரிந்து திட்டினால் நன்றாக இருக்கும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்திற்கு முதல் அமைச்சர்களை தந்த திரைத்துறையால் திரைத்துறையின் சிக்கல்கள் பற்றி அவர்களுக்கு புரிய வைக்கவோ அல்லது புரிந்தும் சிலவற்றை சாதிக்கவோ இயலவில்லை. அரசுக்கு டிக்கெட் விலையை சீரமைப்பதில் அவ்வளவு தயக்கம். மக்கள் வாக்களிக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் உள்ளது. ஆனால் டிக்கெட் விலை உயர்த்துவதில் தான் அரசின் மீது அவநம்பிக்கை வந்துவிடுமா?. பஸ் கட்டணம், பால் விலை, அரிசி விலை, பருப்பு விலை என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மக்கள் மாட்டு மந்தைகள் போல் எதுவும் சொல்லாமல் வாய்மூடி செல்கின்றனர். ஆனால் பத்து வருடங்கள் கழித்து 25% டிக்கெட் விலை உயர்த்தியதற்கு வீராவேசமாக "நாங்கள் திருட்டுதனமாக பார்த்து கொள்கிறோம்" என்கின்றனர். "ஏன்டா பருப்பு விலை அதிகம்னு கடைல போய் திருடி பாரேன்னு" சொல்ல தோணுது. சரி விடுங்க விசயத்துக்கு வருவோம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திரை அரங்கு உரிமையாளர்கள் அரசை சந்தித்து பல வருடங்களாக நீங்கள் டிக்கெட் விலை உயர்த்தவில்லை. நியாயமான டிக்கெட் விலை இல்லாததால் தொழில் நடத்த முடியாமல் பிளாக்-ல் விற்க வேண்டி உள்ளது. இதனால் பல தொந்தரவுகள் உள்ளது. தயவுசெய்து நியாயமான விலை உயர்தித்தாருங்கள் என கேட்க, அரசோ சட்டப்படி விலையேற்றம் சாத்தியம் இல்லை. எனினும் வெளியான இரு வாரங்களுக்கு நீங்கள் விருப்பமான தொகை ஏற்றிக்கொள்ளுங்கள் அரசும் C-பார்ம் விலைக்கு தான் விற்க வேண்டும் என்று ரெய்டு நடத்தாமல் "கண்டுகொள்ளாது" என கூற, இவர்களும் வருங்கால விபரீதம் பற்றி யோசிக்காமல் ஒத்துக்கொண்டு வந்துவிட்டனர். இதில் இருந்து டிக்கெட் விலை படத்திற்கு தகுந்தாற்போல் ஏற்ற ஆரம்பிக்க அங்கங்கு சில ஆர்வலர்கள் சண்டை போடுவார்கள். அரசும் ரெய்டு நடத்தி சீல் வைப்பது போல் வைத்துவிட்டு, விட்டுவிடும்.

இதனிடையே அரசு கேளிக்கை வரி விதிக்க, வந்தது குழப்பம்! மக்களிடம் வசூல் செய்யும் தொகைக்கு கேளிக்கைவரி கட்டவா அல்லது சி-பார்ம் விலைக்கு வரி காட்டவா என..? சரி அரசின் விலைக்கே குறைவாக கட்டி விட்டு பாக்கியை நாம் பிரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்ய... காட்டுவது பொய் கணக்கு தானே என திரையரங்கு நடத்துபவர்கள் சிலர் அனைவருக்கும் பொய் கணக்கு காண்பிக்க.... நானெல்லாம் என்ன சும்பையா என இன்னும் சிலர் ஆரம்பிக்க.... மொத்தமும் அலங்கோலம் ஆனது. இதற்கு இடையே பார்க்கிங் விலை, கான்டீன் விலை, ஆன்லைன் கட்டணம் என பலதும் சேர மக்களுக்கு இந்த பெருஞ்சுமை, அதிபெருஞ்சுமை ஆயிற்று. இவை எல்லாம் இருந்தும் இன்னமும் 100-க்கு 5 பேர் தான் போட்ட முதல் எடுக்கிறார்கள் என்பது தனி கதை!

இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 18% GST எனும் குண்டை வீச, பின் திரைத்துறை கூப்பாடு போட்டு 18%/28%பெற்றது. உடனே மாநில அரசு கேளிக்கை வரி 30% என இன்னொரு குண்டு வீச.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது, இங்கு GST சி-பார்ம் விலைக்கு கட்டவா? அல்லது கவுண்டரில் வசூல் செய்யும் விலைக்கு கட்டவா? முதலில் flexible முறையில் அதிகபட்ச விலை ஒன்றை நிர்ணயித்து படத்திற்கு தகுந்தாற்போல் ஏற்றி-இறக்கி கொள்ள அனுமதி தாருங்கள் எனவும் ₹30 முதல் ₹160 வரை குறித்து தாருங்கள் எனவும் திரை துறை கேட்டது. பல வருடங்களுக்கு பிறகு அரசு ஒரு குழு அமைத்து இவை எல்லாம் கேட்க, நமக்கு எப்படியும் ஓரளவு முறைப்படுத்தப்பட்ட விலை கிடைத்துவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் முதலில் கேளிக்கை வரி 10% ஆக குறைத்து ஒரு அரசு உத்தரவு வந்தது. ஓடிப்போய் டிக்கெட் விலை என்ன ஆனது என்று கேட்க, நீங்கள் கேட்கும் அளவெல்லாம் கொடுக்க முடியாது மொத்தமாக 25% ஏற்றி தருகிறோம் என அரசாணை வெளியிட்டு விட்டது. இதோ இன்று 150 +GST+புக்கிங் சார்ஜ்ஸ் என எல்லாரும் சினிமாவை ஒதுக்குவது பற்றி பேசிக்கொண்டு உள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1150 திரையரங்குகளில் இந்த 150 ரூபாய் கட்டணத்தில் 10% மல்டிப்ளெக்ஸ்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள திரையரங்குகளில் சுமார் 30% திரையரங்குகள் 70ரூபாய் கட்டணத்திலும், எஞ்சிய 60% திரையரங்குகள் 25ரூபாய் கட்டணத்திலும் இனி நடத்த வேண்டி வரும். இதில் 10% கேளிக்கை வரி உள்ளடக்கம். இதுவரை 50ரூபாய் முதல் 200 ரூபாய்வரை வாங்கிக்கொண்டு இருந்த 80% திரை அரங்குகள் இனி இந்த புதிய கட்டணத்தில் தான் நடத்த வேண்டும் என்றால் அது சாத்தியமே இல்லை. இந்த விஷயம் மாநில அரசுக்கு தெரியாதா அல்லது புரியாதா என்றும் விளங்கவில்லை.

எதுவரை மக்களால் செலவிடமுடியும் விலையில இருக்கிறதோ அதுவரை தான் சினிமா இருக்கும் என்பது தெரிந்து இருந்தும் சிலர் அதை உணர மறுப்பதும் ஒருவகை சிக்கலே. ஆனால் டாஸ்மாக் நடத்தும் அரசு 128ml Brandy பஞ்சாயத்தில் ஒரு விலையிலும், தாலுகாவில் ஒரு விலையிலும் விற்பதில்லை. எங்கு திரை அரங்கு அமைந்தாலும் அங்கு சிமெண்ட், கரண்ட், equipments என அனைத்தும் ஒரே விலை தான் அப்படி இருக்க திரை அரங்கு கட்டண விலை மட்டும் எப்படி அரசு ஏரியாவிற்கு ஏரியா மாற்றி விலை நிர்ணயம் செய்கிறது? என்ன சொல்லி அரசுக்கும் மக்களுக்கும் இந்த பிரச்சினைகளை புரிய வைப்பது? இனி நடக்கப் போகும் நாடகங்கள் அனைவருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான காமெடி படமாக வரப்போகிறது என்பது மட்டும் உண்மை!

இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது... புரிய வைக்க முயற்சி செய்கிறேன்...

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x