Published : 24 Oct 2017 10:03 AM
Last Updated : 24 Oct 2017 10:03 AM

புகை, மது, மாது என்ற மூன்று சாபங்களுக்கு அடிமையாகாதீர்கள்: கலைஞர்களுக்கு சிவகுமார் வேண்டுகோள்

பா

டலாசிரியரும், இயக்குநரும், பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் சிவகுமார் நூலை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். இந்த நூலை அருள்செல்வன் தொகுத்துள்ளார். விழாவில் பேசிய சிவகுமார், கலைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் சிவகுமார் பேசியதாவது:

திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்தார். அவருக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனார் தாய். அந்தப் பையன் இட்லி துணியைத் தூக்கி, மேலும் 2 இட்லியை எடுத்து சாப்பிட்டுவிட்டான். கூடவே இருந்த சித்தி, தாய் குளித்துவிட்டு வந்த பிறகு, ‘‘நீ இல்லாதபோது உன் பையன் 2 இட்லியைத் திருடிவிட்டான்’’ என்றாள். ‘‘அவனுக்காகத்தானே இந்தத் தொழிலையே நான் செய்கிறேன்’’ என்று கூறி, தன் மகனுக்கு அடுத்தநாள் முதல் 3 இட்லி கூடுதலாகக் கொடுத்தாள் அந்தத் தாய். இட்லியை எடுத்த பையன்தான் எஸ்.எஸ்.வாசன். சைக்கிளோடு சென்னைக்கு வந்த அவர், பெரிய தயாரிப்பாளர் ஆனார்.

சைக்கிள் ஓட்டத் தெரியாமலேயே, ஒரு சைக்கிளை தெரியாமல் எடுத்துக்கொண்டுபோய் முதல் வாய்ப்பில் நடித்தவர் எம்ஜிஆர். அவர் 10 ஆண்டு கள் போராடி ‘ராஜகுமாரி’யில் நடித்தார். பல ஆண்டுகள் போராடி, குட்டிக்கரணம் போட்டுத்தான் மேலே வந்தார். ஆனால், கையில் 10 ரூபாய் இருந்தபோது 7 ரூபாய் செலவு செய்து 3 ரூபாய் தானம் செய்தவர் அவர்.

உன்னிடம் 10 ரூபாய் இருந்தபோது, ஒரு ரூபாய் தானம் செய்யவில்லை என்றால், 1,000 ரூபாய் இருக்கும்போது சத்தியமாக 100 ரூபாய் தானம் செய்ய மாட்டாய். கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள நடிகர்கள் என்ன தானம் செய்கி றார்கள்?

அன்று நல்ல செய்திகளை மட்டுமே போட்ட பத்திரிகைதான் ‘பேசும்படம்’. அதில் வல்லபன் இருந்தார். சிவாஜி, எம்ஜிஆர், பத்மினி, சாவித்ரி என்று என்னை மாதம் 2 ஓவியங்கள் வரையவைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார். அவர் பிறந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். 1943-ல் பிறந்தவர் 60 வயதில் இறந்துவிட்டார். கேரளாவில் 5-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, 6-ம் வகுப்புமுதல் இங்கு படித்து எஸ்எஸ்எல்சி-யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார். கல்லூரியில் படித்தபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் விருது வாங்கியவர்.

‘பிலிமாலயா’பத்திரிகை அலுவலகத்தில் ஒரு வாசகம் போட்டிருப்பார். ‘நல்லதைச் சொல்லும்போது நன்றி கூற நேரம் இல்லாதவர்கள், அல்லதைச் சொல்லும்போது எரிந்துவிழ உரிமை இல்லாதவர்கள்’ என்று. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா! பிலிமாலயாவில் ‘எரிச்சலூட்டும் எட்டு கேள்விகள்’ என்று கேட்டு வாங்கிப் போடுவார்.

‘விஷ்ணு, சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே, உங்களுக்கு நடிக்க வராதா?’ என்று என்னிடமும் கேட்டு வாங்கிப் போட்டார்.

முதன்முதலில் ஆபாவாணனையும், பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்கவைத்து பேட்டி போட்டவர் வல்லபன். இதைவிட பெரிய விஷயம், இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன். எவ்வளவு பெரிய விஷயம்!

இறுதியாக ஒன்று.. கடவுள் என்பவனும், காலம் என்பவனும் கொடூரமானவர்கள். படைப்புக் கலைஞன் கொஞ்சம் விட்டால் கடவுளையே கேள்வி கேட்பான் என்று அவர்களுக்கு 3 சாபத்தைக் கொடுத்திருக்கிறான். புகை, மது, மாது ஆகிய மூன்றும்தான் அந்த 3 சாபங்கள். பாடகரோ, நடனம் ஆடுபவரோ, இயக்குநரோ.. எந்தக் கலைஞராக இருந்தாலும் சரி. புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்.

உலக அளவில், மறைந்த கலைஞர்கள் பலரையும் எடுத்துக்கொண்டால், இந்த 3 பழக்கங்களும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். உடல்நலம் முக்கியம்.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

விழாவில் நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன், பேரரசு,ஈ.ராம்தாஸ், த.செ.ஞானவேல், கவிஞர்கள் அறிவுமதி, யுகபாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x