Published : 11 Jul 2014 10:59 AM
Last Updated : 11 Jul 2014 11:13 AM
‘தி இந்து’ செய்தி எதிரொலியாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்குதீர்த்தகுளம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்குதீர்த்தக்குளத்தின் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குளத்தின் தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டு குளம் சகதியாக மாறியது. மேலும் குளத்தின் உள்ளே தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், நன்னீரில் சங்கு பிறப்பதில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்த செய்தி ‘தி இந்து’ நாளிதழில் புதன்கிழமை படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக குளத்தின் படிகளை சீரமைத்து அதில் முளைத்துள்ள செடிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளை கோயில் நிர்வாகம் வியாழக்கிழமை முதல் மேற்கொண்டு வருகிறது.
அதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.