புதுமைப்பித்தனின் பொன்னகரத்தை நினைவூட்டும் அந்தார்ககினி!

புதுமைப்பித்தனின் பொன்னகரத்தை நினைவூட்டும் அந்தார்ககினி!
Updated on
2 min read

இனியன்

|டிசம்பர் 15-ம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஷிய கலாச்சார மையத்தில் பகல் 12 மணியளவில் திரையிடப்பட்ட 'Andarkahini' பெங்காலி படத்தின் விமர்சனம்|

வங்காளத்தின் பரந்த நிலப்பரப்பில் எந்த சம்பந்தமுமில்லாத அந்த நான்கு பெண்கள், வாழ்க்கை ஏற்படுத்தும் நெருக்குதல்களில் அவர்கள்- அவர்களை மீறி வெளிப்படுத்தும் அந்தத் தருணம் அதன் தொகுப்பே 'அந்தார்ககினி'.

நான்கு குறும்படங்கள், ஒவ்வொன்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்களை குறிப்பாக பெண்களை ஆழ்ந்து நோக்குகிறது. ஒவ்வொன்றிலுமுள்ள கதாப்பாத்திரங்கள் தங்களுக்கென்று வகுக்கப்பட்டுள்ள நியதிகளை மீறும்போது ஏற்படும் கொந்தளிப்புதான் இவற்றை ஒரு படமாக இணைக்கிறது.

மகள், சகோதரி, தோழி, மனைவி ஆகிய பாத்திரங்களில் வாழும் பிரியங்கா, புல்டி, லட்சுமி, ப்ரியா ஆகிய நால்வரும் தங்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரத்துக்கும் இடையே நிகழும் உரையாடலில் சரி - தவறு, சமூக நியதி, யதார்த்தம் ஆகியவற்றை கேள்விக்குட்படுத்துகிறார்கள்.

பிரியங்கா (மகள்) - உண்மையில் அவள் மகள் அல்ல, ஆனால் தன்னை மகளாக காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பிரியங்கா யார்? அவள் ஒருவனை காதலிக்கிறாள், ஆனால் அந்தக் காதலில் ஒரு விலகல் ஏற்படுகிறது. "எல்லா கேள்விகளுக்கும் விடை இருந்தாகவேண்டும் என்பதில்லை" என்று தன் காதலனிடம் சொல்லுவதன் மூலம் கேள்வி-பதிலுக்குள் அடங்காத தன் இருப்பை வெளிப்படுத்துகிறாள்.

புல்டி (சகோதரி) - சாதாரண டீ கடை வைத்திருக்கும் புல்டியும் அவள் அண்ணனும் பெற்றோரை இழந்தவர்கள். புல்டிக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே உறவு அவள் அண்ணன் மட்டும் தான். ஏழ்மையான அவர்களின் வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் மாற்றங்கள் அதற்குள் சுழலும் புல்டி எடுக்கும் ஒரு முடிவு கடுமையானதொரு நிசப்தத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.

லட்சுமி (தோழி) - தன்னந்தனியே வாழும் ஒரு கிராமத்துப்பெண் கணவனாலும், குடும்பத்தாலும் புறந்தள்ளப்படுகிறாள். ஒரு நாள் எதிர்பாராத நபர் அவர் வீட்டின் முன் தோன்றுகிறார். அந்த நபர் லட்சுமியிடம் அவளுக்கே தெரியாத ஒன்றை அவளிடமிருந்து வெளிக்கொணர அது எப்படி தன் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது என்பதை அறிகிறாள்.

ப்ரியா (மனைவி) - எளிமையான குடும்பப்பெண். கல்யாணம் ஆகி ஐந்து வருடமாகிறது. ஆறு மாதமாக கணவனுக்கு வேலையில்லை, வீட்டுப் பொருளாதாரச் சூழலில் வறட்சி இருப்பினும் கணவன் மனைவிக்குள்ளிருக்கும் உயிரோட்டமான காதல், புறச்சூழலை மறக்கச் செய்கிறது. தங்கள் ஐந்தாம் வருட திருமண நாளைக் கொண்டாட முடிவு செய்கிறார்கள். அதற்கு ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் செய்யும் ஏற்பாடுகள் அது அவர்களே எதிபாராத ஒரு வெளிக்கு அழைத்துச் செல்கிறது. அந்த வெளியில் பிரியாவுக்கும் அவள் கணவனுக்கும் நடக்கும் உரையாடல்கள் அதன் விளைவாக ஏற்படும் மாற்றங்கள் ப்ரியாவின் பதிவாக அமைகிறது.   

இந்த நான்கு பேரின் கதையும் ஏதோ ஓரிடத்தில் ஓஹென்றியின் 'கிப்ட் ஆப் மேகி'யையும் புதுமைபித்தனின் பொன்னகரத்தையும் நிச்சயம் நினைவுபடுத்தும். காலங்கள் தான் மாறுகின்றனவேயொழிய காட்சியில் பெரிய மாற்றம் இல்லை என்பதே அடைகிற புரிதலாகிறது. வங்காளம் போன்ற ஒரு இடதுசாரி ஆட்சியின் கீழ் பல காலம் இருந்திருக்கும் இடத்தில் வாழும் குடும்பங்கள், தனிமனிதர்கள் அந்த அரசு, சித்தாந்தத்தின் நிழல் கூட படாத சூழலே தற்போதைய யதார்த்தமாக நிலவுகிறது என்பதை படம் பிரதிபலிக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் அர்னாப் கே மித்தியா இந்த படம் எடுப்பதற்கான காரணம் பற்றி கூறும்போது 'தற்கால சமூக உறவுகள் மிகவும் பிரச்னையான ஒன்றாக உள்ளது, மனிதர்களிடம் நேரில் பேசுவதைவிட போன் மூலம் பேசுவதே அதிகம். இந்த சமூகச்சூழல் தான் அந்தார்ககினி எடுக்க உந்துதலாக இருந்தது' என்கிறார்.

யதார்த்தத்னின் மேல் நமக்கு விமர்சனம் இருக்கலாம், எதிர்க்கலாம் அல்லது ஏற்கலாம். ஆனால் புறந்தள்ள முடியாது. அந்தார்கனி நம்முன் நிற்கும் நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் யதார்த்தம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in