Last Updated : 27 Jan, 2018 05:12 PM

 

Published : 27 Jan 2018 05:12 PM
Last Updated : 27 Jan 2018 05:12 PM

‘கற்பனை திறனுக்கான இடத்தில், பிரச்சினைகள் வரக் கூடாது’ஜெய்பூர் இலக்கிய விழாவை தவிர்த்தார் பிரசூன் ஜோஷி

ஜெய்பூர்,

ஜெய்பூரில் நடந்து வரும் ஜீ ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்கப் போவதில்லை என மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி இன்று தெரிவித்தார்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு பிராசூன் ஜோஷி வந்தால், அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும், பிரச்சினைகள் செய்வோம் என ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜீ ஜெய்பூர் இலக்கிய விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் “என்னுடனான உரையாடல்கள்” என்ற தலைப்பில் உரையாற்ற மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பத்மாவத் திரைப்படத்துக்கு அனுமதி கொடுத்த காரணத்தால் பிரசூண் ஜோஷி மீது ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் கடுமையான கோபத்தில் இருந்தனர். ஜெய்பூர் இலக்கிய விழாவுக்கு பிரசூன் ஜோஷி வந்தால்,அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும், விழாவுக்கு இடையூறு செய்வோம் என அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துஇருந்தனர்.

இந்நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, ஜெய்பூர் இலக்கிய விழாவுக்கு வருவதை தவிர்ப்பதாக இன்று தெரிவித்தார். அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-

இந்த ஆண்டு ஜெய்பூர் இலக்கிய விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இலக்கிய ஆர்வலர்கள், கவிதை காதலர்களோடு உரையாடும் மிகப்பெரிய தருணத்தை நான் இழக்கிறேன். நான் இந்த விழாவில் பங்கேற்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணமே கற்பனைத் திறன் வளர்க்கும் இடத்தில், பிரச்சினைகள் உருவாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்த இலக்கிய விழாவின் மான்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால்தான் நான் விழாவுக்கு வரவில்லை.நான் இந்த விழாவுக்கு வராமல் இருப்பதன் மூலம், இங்கு வரும் மற்ற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் பாதுகாக்கப்படுவார்கள் .

அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. இலக்கியத்தின் மீது காதல் கொண்டு இங்கு வருபவர்களுக்கு கற்பனைத்திறன் மீது கவனத்தை செலுத்த விடவேண்டும், பிரச்சினைகள் மீது அல்ல.

பத்மாவத் திரைப்படத்துக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் நான் எனது கடமையை நேர்மையுடன், நியாயமாக, நடுநிலையுடன் செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெய்பூர் இலக்கிய விழாவுக்கு பிரசூன் ஜோஷி பங்கேற்கமாட்டார் என்ற செய்தியை அறிந்த ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு இதுபோல் சிறப்பு விருந்துனர் வராமல் மிரட்டல்விடுப்பது 2-வது முறையாகும். இதற்கு முன், கடந்த 2012ம் ஆண்டு சல்மான் ருஷ்டி பங்கேற்கும் போது, அவர் வருகைக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x