

சென்னை: நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 20-ம் தேதி முடிவடைகிறது.
தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கணக்கு அலுவலர், வேளாண் உதவி இயக்குநர், அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் (கணக்கு), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்குழக (டிக்) பிரிவு அலுவலர்-நிதி, உதவி மேலாளர் (மெட்டீரியல்) உள்ளிட்ட பதவிகளில் 76 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கான (நேர்காணல் பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த டிசம்பர் 22-ம் தேதி அன்று வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அன்றே தொடங்கியது. வெவ்வேறு தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் கொண்ட இந்த தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 20-ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வானது கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு, பொது அறிவுத்தாள், தொழில்நுட்ப பாடத் தேர்வு என 3 தேர்வுகளை உள்ளடக்கியதாகும். இந்த தேர்வு மார்ச் 7, 8-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.