

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 42 மருத்துவ உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பின் விவரம்: தமிழக அரசின் பொது சுகாதார சார்நிலை பணியில் கள உதவியாளர் (Field Assistant) பதவியில் 42 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். அதோடு மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பாடத்தில் ஓராண்டு கால சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இப்படிப்புக்கு தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் அவசியம்.
விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் நலமும், நல்ல கண் பார்வையும் பெற்றிருக்க வேண்டும். அதோடு களப்பணியை செய்யக்கூடிய ஆற்றலும் அவசியம்.
வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பொதுப்பிரிவில் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு கிடையாது. தகுதியான நபர்கள் 'வெயிட்டேஜ்' முறையில் தேர்வுசெய்யப்படுவர்.
அதாவது, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப சான்றிதழ் தேர்வுக்கு 50 சதவீதம், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீதம், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீதம் என மொத்தம் 100 சதவீத வெயிட்டேஜ் அளிக்கப்படும்.
உரிய கல்வித்தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி டிசம்பர் 29-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.