

சென்னை: 3 ஆண்டுகளுக்கு பிறகு 245 சிவில் நீதிபதி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முன் இத்தேர்வை உயர் நீதிமன்றமே நடத்தி வந்தது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு போன்றவற்றில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது.
2018-ல் 320 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 2019-ல் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய நேர்முகத் தேர்வு காரணமாக 56 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான உத்தேச திட்டமிடல் கால அட்டவணையில், '245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். ஜூலை மாதம் முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 245 சிவில் நீதிபதி இடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இதன்பிறகு 5 முதல் 7ம் தேதி விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும், மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி நடைபெற உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தை பார்வையிடவும்