

மதுரை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும், என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த ஏப்.3-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப் பி, சி நிலையில் 7,500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இது தொடர்பான விவரங்கள் https://ssc.in/SSCFiles/noticeCGLEO3042023.pdf என்ற இணையதள முகவரியில் உள்ளன. www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான இத்தேர்வு, வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 7 மையங்களில் நடக்கிறது.
இத்தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் அளிக்கப்பட உள்ளன. கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் நடக்கும். இத்தேர்வுக்கான பாடத்திட்டம், பாடக் குறிப்புகள் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றம் பயிற்சி துணையின் மெய் நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மைய பயிற்சி மையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம், என அதில் தெரிவித்துள்ளார்.