Published : 17 Mar 2023 06:00 AM
Last Updated : 17 Mar 2023 06:00 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் வளர்மதி ஆய்வு

வாலாஜா அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி. அருகில், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் உள்ளிட்டோர்.

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஜி.கே. உலகப்பள்ளி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் 18-ம் தேதி (நாளை) வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை, தொழில் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, பொறியியல் படித்த வேலை தேடுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் நிறுவனங்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்நிலையில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைத்து இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கோடை வெயில் அதிகரித்து வருவதால் வெப்பத்தை தணிக்க ஆங்காங்கே நிழற்குடைகள் அமைக்க வேண் டும். தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதுகுறித்து ஆட்சியர் வளர்மதி கூறும்போது, ‘‘வேலைவாய்ப்பு முகாமில் 60-க்கும் மேற்பட்ட அறைகளில் தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 12 நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய பதிவு செய்துள்ளனர். இந்த முகாமை வேலை தேடுவோர் பயன்படுத்தி கொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மகளிர் திட்ட இயக்குநர், நகராட்சி, பேரூராட்சி துறை அலுவலர்கள் மூலமாகவும் வேலை வாய்ப்பில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து வசதி: இந்த முகாமில் இளைஞர்கள் எளிதாக கலந்து கொள்ள தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஆற்காடு, முத்துக்கடை, வாலாஜா வழியாக 2 பேருந்துகளும், வாலாஜா பேருந்து நிலையத்தில் இருந்து 2 பேருந்துகளும், வாலாஜா வழியாக கல்லூரிக்கு 3 பேருந்துகளும், நெமிலியில் இருந்து 1 பேருந்தும், கலவை பேருந்து நிலையத்தில் இருந்து 2 பேருந்துகளும், திமிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 பேருந்து வேலை வாய்ப்பு முகாமுக்கு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வேலூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தங்களுக்கான வேலையை பெற வேண்டும்’’ என்றார்.

ஆட்சியர் ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், மகளிர் திட்ட இயக்குநர் நீலதாசன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x