

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் நாளை (பிப்.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் வேறெந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிக நிறுவனங்கள் மற்றும் அதிக வேலை தேடுநர்களை இந்த முகாமில் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முகாமில் கலந்துகொள்ள இதுவரை 515 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. 58 ஆயிரத்து 597 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலை தேடி வருகிற இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்புத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களுக்கு தகுதியான வேலையை பெற்று பயன் பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.