

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கும் ரோஜ்கர் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழா) பிரதமர் மோடி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மற்றும் மத்திய அரசு பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி மாநிலங்களவையில் கோரியிருந்தார். இதற்கு மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இபிசி, இடபிள்யூஎஸ் ஆகிய இடஒதுக்கீடுகளின் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும்.
கடந்த 2021 மார்ச் 3-ம் தேதி நிலவரப்படி மத்திய அரசின் 78 துறைகளில் 9.8 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இதன்படி அதிகபட்சமாக ரயில்வே துறையில் 2.93 லட்சம் கோடி காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு அடுத்து மத்திய பாதுகாப்புத் துறையில் 2.64 லட்சமும், உள்துறையில் 1.43 லட்சம் காலி பணியிடங்களும் உள்ளன.
அஞ்சல் துறையில் 90,050, வருவாய் துறையில் 80,243, கணக்கு தணிக்கையில் துறையில் 25,934, அணுசக்தி துறையில் 9,460 உட்பட பல்வேறு துறைகளில் காலியிடங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 9,79,327 காலியிடங்கள் உள்ளன. ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.