

சென்னை: கல்வித் தகுதியையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் கடற்படையில் பல உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 5 மற்றும் 6-ம் பகுதிகள் கடந்த வியாழன், ஞாயிறு (ஜன. 26, 29) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி கலந்துரையாடினர்.
இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் எஸ்.நவநீத கிருஷ்ணன், ‘இந்தியகடற்படையிலுள்ள வேலை வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது: ஒரு நாடு வல்லரசாக திகழ வேண்டுமென்றால் அந்நாட்டின் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவை மூன்றும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். பிளஸ் 2 படிக்கும் வரை கடற்படையில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏதும் எனக்கு இருந்ததில்லை. பேப்பரில் வந்த அறிவிப்பை பார்த்து, நேவியில் இன்ஜினீயரீங் கல்வியை இலவசமாகப் படிக்கலாம் என்று நானும் விண்ணப்பித்தேன். பெங்களூரு சென்று அங்கு 5 நாட்கள் பயிற்சி பெற்ற பிறகு,இனி நாம் நேவியில் தான் சேர வேண்டுமென்று தீர்மானமாக முடிவெடுத்தேன்.
தனித்துவ செயல்பாடு: இந்திய கடற்படை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சிறந்த படையாக விளங்கி வருகிறது. நாமே கப்பல்களை வடிவமைத்து உருவாக்குகிறோம். பல விஷயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, தனித்துவமாக நாமே செயல்படுத்துகிறோம் என்ற சிறப்பு, இந்திய கடற்படைக்கு உண்டு. இத்தகைய சிறப்புக்குரிய கடற்படையில் வேலைவாய்ப்புகள் நிறையவே உள்ளன. கடற்படையில் சேர வேண்டுமென்ற ஆர்வத்தோடு, அதற்கான கல்வித் தகுதியையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் கடற்படையில் பல உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என்றார்.
இந்திய கடலோர காவல்படை கமாண்டன்ட் என்.சோமசுந்தரம், ‘இந்திய கடலோர காவல்படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது: இந்திய கடற்படைக்கும், இந்திய கடலோர காவல்படைக்கும் வேறுவேறு பணிகள் உள்ளன என்பதே பலரும் அறிந்திராதது. போர்க்காலங்களில் இந்திய எல்லையில் நின்று போரிடும் பணியை இந்திய கடற்படை செய்கிறது.
அமைதி காலத்தில் கடல்சார் சட்டங்களைக் காப்பதும், கடலோரங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதுமே கடலோர காவல்படையின் பணியாகும். கடலோர காவல்படையின் பணியில் சேர கணிதம், இயற்பியல் இரு பாடங்களிலும் அடிப்படை அறிவு இருப்பது மிகவும் அவசியமாகும். ஆண், பெண் இருவருக்குமான வேலைவாய்ப்புகள் கடலோர காவல்படையில் உள்ளன. தற்போது பெண்களும் பல பிரிவுகளில் சேர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். முப்படைகளிலும் இல்லாத இடஒதுக்கீடு இந்த கடலோர காவல்படையில் இருக்கிறது. முயற்சியும் திட்டமிடலும் இருந்தால் இத்துறையில் சேர்ந்து, உயர்ந்த நிலைக்கு வரலாம் என்றார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடியபோது கூறியதாவது: இந்திய கடற்படை என்பது கண்ணுக்குத் தெரியாத கடலுக்குள் இருக்கும் எல்லைக்கோடை காவல்காக்கும் படையாகும். கடற்படையில்இருக்கும் எண்ணற்ற வேலைவாய்ப்புகளைப் பற்றி பலரும் அறியாமல் இருக்கிறார்கள். அதனைப் பற்றி அறிந்துகொள்வதோடு, அந்தப் பணிகளில்சேர்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்திய கடலோர காவல்படையை ‘கடலின் காவலர்கள்’ என்றும் அழைக்கின்றனர். இந்தப் படையில் வெறும் கப்பல்கள் மட்டுமல்லாமல், விமானம், ஹெலிகாப்டர், ஆளில்லா விமானம், தரையிலும் கடலிலும் செல்லும் மிதவை கப்பல் உள்ளிட்ட பல நவீன கருவிகளும் செயல்பாட்டில் உள்ளன என்றார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.இந்த இரு நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள் https://www.htamil.org/Session5, https://www.htamil.org/Session6 என்ற லிங்குகளில் பார்த்துப் பயன்பெறலாம்.