

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு கடற்படை, கடலோரக் காவல்படை பணிகளில் சேர மெரைன் போலீஸார் மூலம் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்புப் பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழி காட்டுதல்) இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படுகின்றன.
இந்த 3 மாத கால இலவசப் பயிற்சி 40 பேர் கொண்ட 3 குழுக்கள் என மொத்தம் 120 பேருக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி, கடலூர் ஆகிய 3 மாவட்ட மையங்களில் நடத்தப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் 120 பேருக்கும் உணவு, தங்குமிடம், பயிற்சி கையேடுகள், உபகரணங்கள், உடை வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதம் ரூ.1,000 உதவித் தொகையும் உண்டு. பிளஸ்-2 தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சத வீதத்துக்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித் தனியாக 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
இந்த விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகங்கள், மெரைன் காவல் நிலையங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.