

சென்னை: வேலையில்லாத இளைஞர்களுக்காக சென்னையில் நாளை தனியார் நிறுவன வேலைவாய்ப்பு இலவச முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர்கொ. வீரராகவ ராவ் தெரிவித்திருப்பதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை ஆலந்தூரில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜன.20) காலை 10.00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங்குகிறது.
இம்முகாமில் 8 முதல் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் உள்ளிட்ட கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதன் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. வேலை நாடுநர்கள் மற்றும் வேலை வாய்ப்பளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு ஆணையர் தெரிவித்தார்.