

சென்னை: அரசுப் பணிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
2023-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த வாரம் வெளியிட்டது. அதில் குரூப் 1, குரூப் 2 போட்டித் தேர்வு குறித்து அறிவிப்பு இடம்பெறவில்லை.
தேர்வர்கள் அதிருப்தி: மேலும், அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த தகவல்கள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் டிஎன்பிஎஸ்சி திருத்தம் மேற்கொண்டு, புதிதாக குரூப் 1 தேர்வு விவரங்களை இணைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். இதற்கான முதல்நிலைத் தேர்வு நவம்பரில் நடத்தப்பட்டு, 2024 மார்ச் மாதம் முடிவு வெளியிடப்படும். பிரதானத் தேர்வுகள் ஜூலை மாதமும், அதன் முடிவுகள் நவம்பர் மாதமும் வெளியிடப்படும். டிசம்பர் மாதம் நேர்காணல், கலந்தாய்வு நடத்தப்படும். காலிப் பணியிடங்கள் விவரம் பின்பு வெளியிடப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.